தமிழகத்தில் தொடர்ந்து 3-வது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, இம்முறை அனைத்து பயனர்களுக்கும் 4.83% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்க விகித அடிப்படையில் மின்கட்டணத்தை ஆண்டுதோறும் மாற்றியமைக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022 செப்.9-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
அதன்படி 2026-27 வரை தொடர்ந்து மாற்றியமைக்கவும், ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்த மாற்றத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (ஜூலை 15) மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 4.60லிருந்து 4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் இந்த மின் கட்டண உயர்வு ஒரு கோடி பேரை பாதிக்காது என்றும், தொடர்ந்து முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் மின் வாரியம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இந்த உயர்வு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வு மாநிலத்தில் உள்ள 2.47 கோடி உள்நாட்டு நுகர்வோரில் குறைந்தது ஒரு கோடி பேரையாவது பாதிக்காது என்றும், அவர்கள் தொடர்ந்து முதல் 100 யூனிட்களை இலவசமாகப் பெறுவார்கள் என்றும் டாங்கெட்கோ திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
புதிய மின் கட்டண விவரம்
அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் 0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.6.15ல் இருந்து 6.45ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆகவும், 601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.9.20ல் இருந்து ரூ.9.65ஆகவும், 801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.10.20ல் இருந்து ரூ.10.70ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ரூ.11.80 வசூலிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“