நெய்வேலி நிலக்கரி சுரங்க பிரச்சனைக்கு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் எனவும் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு பி ஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் சட்ட விரோத நடவடிக்கையை கண்டித்து என்எல்சியே வெளியேறு என தீவிர போராட்டம் நடந்து வருகிறது.
வளையமாதேவி கிராமத்தில் பரவனாறு மாற்று கால்வாய் வெட்டுகிறோம் என்கிற பெயரில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் அழிக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் கருத்து கேட்பதற்காக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் கார் மூலம் இன்று நேரில் சென்றார்.
செல்லும் வழியில் சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையில் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பி.ஆர். பாண்டியனை தடுத்து நிறுத்தினர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே செய்தியாளர்களை சந்தித்துப் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது:
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்கபரில் 1956 முதல் விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் பெருகும். பொருளாதாரம் உயரும், பகுதி மேம்படும் என்கிற நம்பிக்கையோடு எதிர்பார்ப்போடும் நிலமளித்தனர்.
ஆனால், அதற்கு நேர் மாறாக இதுவரையிலும் நிலம் அளித்த 4300 குடும்பங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக நாள் ஒன்றுக்கு 430 ரூபாய் சம்பளத்தில் 10 முதல் 33 ஆண்டுகளாக பணியாற்றி வருவது வேதனை அளிக்கிறது. நிரந்தர படுத்துங்கள் என்று வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உரிய ஒப்பந்தப்படி எந்த வளர்ச்சியும் மேற்கொள்ளாத நிலையில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணியை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நிலக்கரி சுரங்க நிறுவனத்தோடு ஈடுபட்டு வருகிறது. உரிய முறையில் சட்டத்திற்கு உட்பட்டு நிலம் கையகப்படுத்தப்படவில்லை.உரிய தொகை வழங்கப்படாமல் பத்தாண்டு காலம் கிடப்பிலேயே போட்டுள்ளனர்.
ஏற்கனவே, தோண்டப்பட்ட சுரங்கங்களில் இருந்து வெளியேறிய உபரி நீரால் கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுரங்கப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த மணல் குவியல்கள் ஒட்டு மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டு பல குடும்பங்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர். பல நூறு வீடுகள் மணல் குவியலாக காட்சியளித்தது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் விளைநிலங்கள் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு மணல்மேடாக காட்சியளித்தது.
இந்நிலையில் 2-வது கட்ட விரிவாக்க சுரங்கம் தோண்டுவதற்கு முன்னதாக உரிய வடிகால் கால்வாய் வெட்டப்படாமல் ஏற்கனவே வடிகாலாக பயன்பட்டு வந்த பரவனாறு முற்றிலும் அபகரிக்கப்பட்டு சுரங்கம் வெட்டப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எந்த நேரமும் சுரங்க நீர் தேக்கப்பகுதி உடைப்பெடுக்கும் என்கிற மிரட்டலோடு சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் புதிய பாதையில் பரவனாறு வெட்டும் பணியை பயிர்களை அழித்து துவங்கியிருப்பது முற்றிலும் சுற்றுச்சூழல் துறை, நீர்ப்பாசன துறை, வேளாண்துறை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளது.
இது குறித்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது. அவ்வாறு கால்வாய் வெட்டப்படாவிட்டால் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரழிவு ஏற்படும் என நிர்வாகத் தரப்பில் முன் வைக்கப்படுகிறது.
கால்வாய் வெட்டப்படும் கரையோரப் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் எங்கள் பகுதிக்கு என்எல்சி தேவையும் இல்லை. இப்படி வெட்டப்படும் கால்வாயால் ஒட்டுமொத்த நீர்வழி பாதைகளும் அடக்கப்பட்டு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கி வாழ முடியாத நிலை ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையை வைத்து விவசாயிகளை மிரட்டி அச்சுறுத்தி கால்வாய் தோன்டுவதற்கும், நிலங்களை கையகப்படுத்துவதற்கும் சட்டவிரோதமாக தமிழ்நாடு அரசு, நெய்வேலி
நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு துணை போவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
பேரழிவு குறித்து உரிய ஆய்வுகள் நடத்தி நிரந்தர தீர்வு காணும் வரையிலும் எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது. உடனடியாக நிலக்கரி சுரங்கம் குறித்தும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்தும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பணி பாதிப்பு மற்றும் ஒப்பந்த தொழிலாளர் வேலை உத்திரவாதம் குறித்து ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் நீர்பாசனத்துறை, வேளாண் துறை, சுற்றுச்சூழல் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறையினுடைய செயலாளர்கள், நீரியல், மண்ணியல் மற்றும் சுற்றுச்சூழல், வல்லுநர்கள் உள்ளடக்கிய ஆய்வுக்குழு அவசரமாக அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து முழு ஆய்வு அறிக்கை பெற வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி உரிய தீர்வு காண முதல்வர் முன்வர வேண்டும்.
மேலும், விவசாய சங்க தலைவரான என்னை விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிய செல்வதற்கு கூட அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்திற்கு முரணானது. மனித உரிமை மீறலாகும்.
எனவே, என்எல்சி நிர்வாகம் செயல்படுவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கிற வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் என்எல்சி துவங்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுமையிலும் விவசாயிகளையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசின் விவசாய விரோத நடவடிக்கைக்கு எதிராக தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.
முன்னதாக, என்எல்சி நிர்வாக அலுவலகத்திற்கு முன்னாள் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்திக்க சென்றேன். அப்போது மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அமைதி ஏற்படுத்த உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அமைதியை விரும்பும் நோக்கோடு அங்கு செல்வதை தவிர்த்து விட்டேன் என்றார்.
இந்த சந்திப்பின்போது, கடலூர் மாவட்ட செயலாளர் எம் ராமச்சந்திரன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பி.ஆர் பாண்டியன் சேத்தியாத்தோப்பு வந்த நிலையில் அங்கு பரபரப்பு நிலவியது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.