தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருவாரூர் வி.பி.கே லாட்ஜ் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பஞ்சநாதன் தலைமையேற்றார். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தில் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன், பேரழிவு ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் மூடப்பட்ட நிலையில், அதனை செயல்பட்டுக்கு கொண்டு வர முயற்சிப்பது யார்? முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இஸ்மாயில் குழு அறிக்கை வெளியிடாமல் காலங்கடத்துவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது: முல்லைபெரியாறு, வைகை அணைகள் நிரம்பிய நிலையில் பாசனத்திற்கு தண்ணீரை பகிர்ந்து அளிக்க வைகை, முல்லைப் பெரியாறு விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால், அரசாணையை காரணங்காட்டி பாசனத்திற்கு தண்ணீர் விட மறுத்து கடலில் தண்ணீரில் கலக்க செய்யும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.
காவிரி டெல்டா விவசாயம் பாதிப்பிற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஜூலை மாதமே சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு தண்ணீரை பெறுவதற்கு காலம் கடத்தியதால் குறுவையும் இழந்து, சம்பா தாளடியையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலங்கடந்து சம்பா சாகுபடி மேற்கொள்ள நவம்பர் மாதம் வேளாண்துறை விடுத்த வேண்டுகோளை ஏற்று, நடவப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் பெருமழையில் பயிர்கள் அழிவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறுகிறார்கள்.
பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை திட்டத்திலிருந்து ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மறைமுகமாக அதிகாரமிக்க அரசியல்வாதிகள் துணை போகிறார்களோ? என அஞ்சத் தோன்றுகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு துணை போகிறார்கள். இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கையை வெளியிடாமல் ஓர் ஆண்டு காலம் கடத்துவது ஏன்? என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.3500-ம், கரும்பு டன் 1க்கு ரூ.5000-ம் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் - 2023 திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்ட கொண்டு வர வேண்டும். மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜனவரி 1 முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், செயலாளர் சரவணன் மாநில துணை செயலாளர் செந்தில்குமார் மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் உட்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.