மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக தலைவருக்கு பாராட்டையும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500, கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்கள்.
இரண்டு ஆண்டுகள் கடக்கும் நிலையில் இதுவரையிலும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை. வரும் சம்பா கொள்முதலில் உடனடியாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாயும், கரும்பு டன் ஒன்று 4 ஆயிரம் ரூபாய் வழங்கி கொள்முதல் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
கோவில் அறக்கட்டளைகள் சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்து வந்த குத்தகை விவசாயிகளை குத்தகை பாக்கி என்ற பெயரில் நில வெளியற்றம் செய்து, குத்தகைப் பதிவை ரத்து செய்து உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், வருவாய் நீதிமன்றங்களை மூடி விவசாயிகளுக்கு குத்தகை பதிவை புதுப்பித்து குத்தகை நிலுவைத் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் உரிமை மீட்பு மாநாடு வரும் 27ஆம் தேதி மன்னார்குடியில் நடைபெற இருக்கிறது.
இதில், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். பாராளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் தேவகவுடா மேகதாது அணைக்கட்ட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் எதிர்ப்பதை ஏற்கக் கூடாது எனப் பேசினார்.
அதனை எதிர்த்து பேசிய வைகோ மேகதாது அணை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்பது சட்டவிரோதம். அணை கட்டினால் தமிழகம் அழிந்து போகும். எனவே ஒருபோதும் மேகதாது அணைக்கட்ட வலியுறுத்தி மாநிலங்களவையில் பேச அனுமதிக்க கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வைகோ கண்டன குரல் எழுப்பினார்.
இதற்காக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் விவசாயிகள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் அருகில் அமர்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களை உறுப்பினர்கள் வாய் திறக்க மறுத்ததும், மேகதாது அணை கட்டுமானத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதி காத்ததும் ஏன்? என்பதை தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்.
மேகதாது பிரச்சனையில் கண்டு கொள்ளாமல் இருந்த மாநிலங்களவை உறுப்பினர்களை விவசாயிகள் சார்பில் கண்டிக்கிறோம்.
பெற்ற காவிரி உரிமை பறிபோவதற்கு திமுக இடம் அளிக்க கூடாது என வலியுறுத்துகிறோம். இது குறித்து தமிழக முதலமைச்சர் தனது நிலையை தெளிவுப்படுத்த முன் வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம். செந்தில்குமார் உடனிருந்தார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/