நிபந்தனையின்றி நெல் கொள்முதல் செய்திட வேண்டும் – பி.ஆர் பாண்டியன், அய்யாக்கண்ணு கூட்டாக வலியுறுத்தல்

ஆட்சியாளர்களின் விவசாயிகள், மக்கள் விரோத திட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; நவம்பரில் டெல்லியில் போராட்டம் நடைபெறும் – விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர் பாண்டியன், பி.அய்யாக்கண்ணு கூட்டாக அறிவிப்பு

ஆட்சியாளர்களின் விவசாயிகள், மக்கள் விரோத திட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; நவம்பரில் டெல்லியில் போராட்டம் நடைபெறும் – விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர் பாண்டியன், பி.அய்யாக்கண்ணு கூட்டாக அறிவிப்பு

author-image
WebDesk
New Update
farmer trichy paddy

சம்யுக்த் கிசான் மோர்ச்சா அரசியல் சார்பற்ற அமைப்பின் தமிழக தலைவர் பி.அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இன்று (அக்டோபர் 9) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செய்தியாளர் மன்றத்தில் ஒன்று கூடி செய்தியாளர்களைச் சந்தித்தனர்

Advertisment

அப்போது, ”காவிரி டெல்டாவில் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாதகமான பருவ காலத்தால் மகசூல் அதிகரித்துள்ளது. கொள்முதல் குறித்து முன்கூட்டியே திட்டமிடல் இல்லாததால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலைய வாயிலிலேயே 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சிப்பங்கள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி கிடங்குகள் முன்கூட்டி திறக்கப்படவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர்கள் பணி மாறுதல்களால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இனியாவது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். 

விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதிலும் உரம் பெறுவதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்வதால் ஒட்டுமொத்த வேளாண்மையையும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

முல்லை பெரியாறு அணை 148 அடி தண்ணீரை நிரப்பாமல் பேரிடர் காலத்துக்கான ரூல்க்கர்வு முறையை சொல்லி 136 அடியிலேயே தண்ணீர் திறக்கப்பட்டதால் 58 ஆம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் பகிர்ந்து அளிப்பதில் பெறும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

மூத்த அமைச்சர் நீர் பாசனத்துறையில் இருக்கிறபோது அவரது அனுபவத்தை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது. நதிநீர் திட்டங்கள் சீரமைப்பிற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்துவிட்டது. காலம் கடந்து ஒதுக்கப்பட்ட நிதியால் பெரும்பகுதியான பணிகள் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. 

தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தால் நீர் நிலைகள், விளைநிலங்கள் கார்ப்பரேட் அபகரித்துக் கொள்ள வழிவகுக்குகிறது. இச்சட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலமும் கொண்டு வராத நிலையில் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தென்னக நதிகளை இணைப்பதற்கு திட்டமிடவில்லை. கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

ஈரப்பதம் காரணங்காட்டி கொள்முதல் தடை செய்யக்கூடாது. தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அதிகப்படுத்தி திறந்திட வேண்டும். அன்றாடம் கொள்முதல் செய்யும் நெல்லை அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசிகளை உடனடியாக பொது விநியோகத்திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்தும் ஆட்சியாளர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காக டிசம்பர் 15 முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சார பயணத்தை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ள உள்ளோம்,

கரூரில் 41 பேர் கொலையான சம்பவத்திற்கு நீதிகிடைக்க வேண்டும். நீதிமன்றம் தனி விசாரணைக் குழுவும், தமிழக அரசு முன்னாள் நீதி அரசர் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைத்துள்ளதால் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் இறுதி அறிக்கை வழங்கப்பட்டு இதுவரையிலும் தீர்வு காணவில்லை. எனவே குழுக்கள் அமைக்கிறோம் என்கிற பெயரால் நீதி கிடைக்காமல் மூடி மறைக்கக் கூடாது” என்று விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

2026 தேர்தலில் யாரை ஆதரிப்பீர்கள் என செய்தியாளர்கள் கேள்விக்கு, ”ஆட்சியாளர்களின் விவசாயிகள், மக்கள் விரோத திட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். ஜனநாயக நாட்டில் வாக்குரிமை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் யாரை முடிவு எடுக்க விரும்புகிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள்,” என்று பதில் அளித்தனர்.

மூத்த தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், ”தமிழக முதலமைச்சர் திருச்சி வரும்போது சந்திக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல. டெல்லியில் போராடிய போது நேரில் சென்று ஆதரவளித்து அரசியல் ஆதாயத்திற்காக தனதாக்கிக் கொண்ட தி.மு.க, தற்போது முதலமைச்சரான பிறகு சந்திக்க மறுப்பது நாகரீகமற்ற செயல்” என்றார்,

இந்தச் சந்திப்பின்போது மாநிலத் துணைத் தலைவர் வி.எம் ஃபாரூக் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கஜேந்திரன் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

க.சண்முகவடிவேல் 

Farmer Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: