Ayyakannu | PR Pandian | அய்யாக்கண்ணு உள்ளிட்ட போராட்ட குழுவினருக்கு ரயிலில் தண்ணீர் கொடுக்காமல் பழி வாங்குவதா? என மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பிஆர். பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர், “தென்னிந்திய நதிகள் இணைப்பு தலைவரும் எஸ்.கே.எம் (NP)தமிழ்நாடு பிரிவு தலைவரும் அய்யாக்கண்ணு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23, 24 ஆகிய இரண்டு தினங்களாக டெல்லியில் உயர்நீதிமன்ற அனுமதியோடு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (24ம் தேதி) முன்தினம் டெல்லி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, கட்டாயப்படுத்தி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அன்று இரவு முன்பதிவு இல்லா பெட்டியில் ஏற்றி அனுப்பி உள்ளனர் .இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்க மறுப்பதோடு,நீதி கேட்டு அமைதி வழியில் போராடும் விவசாயிகளை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது மட்டுமன்றி தற்போது ரயில் சுமார் 10 மணி நேரம் காலதாமதமாக வந்து கொண்டுள்ளதாகவும், நேற்று (25ம் தேதி) மதியம் 3 மணி முதல் இதுவரையிலும் அவர்கள் பயணம் செய்யும் பெட்டிக்கு தண்ணீர் கொடுக்காமல் மறுத்து உள்ளனர்.
இதனையடுத்து பெல்லார்ஷா ரயில் நிலையம் அருகே அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் தருவதாக கூறியும் தற்போது ஓங்கோல் ரயில் நிலையம் வரையிலும் தண்ணீர் வழங்காமல் கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.
இதனால் விவசாயிகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றியும், காலை கடன்களை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.இது குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி விவசாயிகளை கொடுமைப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பிரதமர் மோடி போராடும் விவசாயிகளை துப்பாக்கி கொண்டு சுட முயற்சிப்பதும், பழிவாங்க துடிப்பதும் ஏற்கத்தக்கது அல்ல. இது குறித்துவிசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“