தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து காவேரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக 5,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டமானது பிற்பகல் கூடியது. இந்த கூட்டத்தில் கர்நாடகாவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து செய்தியாளரிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார், தற்போதைக்கு அணையில் எவ்வளவு தண்ணீர் இருந்ததோ, அது முழுவதுமாக திறக்கப்பட்டு விட்டது. இனி திறப்பதற்கு தண்ணீர் இல்லை.
தற்போதுள்ள தண்ணீர் கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இருக்குமா என்ற ஒரு சந்தேகம் இருந்துள்ளதாகவும், குடிநீர் தேவையை புறக்கணித்துவிட்டு, விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் தமிழ்நாடு காவிரி விவசாயி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் 3.50 லட்சம் ஏக்கர் குருவை கருகத் தொடங்கிவிட்டது. 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி துவங்க முடியாமல் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள்.
இந்நிலையில் எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்பது போல கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி தமிழகத்திற்கு தண்ணீரை விடுவிக்க மாட்டேன். மேகதாது அணை கட்டியே தீருவேன் என சட்ட விரோதமாக பேசியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது. அண்டை மாநில உறவுகளை சீர்குழைக்கும் முயற்சியாகும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு மோடி அரசுக்கு உள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு தமிழ்நாடு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள் தமிழக அரசு இருந்த தண்ணீரை வீணடித்து விட்டதாகவும், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டிற்கு கைகொடுக்கும். எனவே கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக கூறி தமிழ்நாட்டுக்கு எதிரான வஞ்சக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவிரி குறித்த நீர் பங்கீட்டு முறைகளை செயல்படுத்தி வரும் நிலையில், ஆணையத்தின் கருத்தை முறியடிக்கும் விதத்திலும், தமிழக விவசாயிகளுக்கு எதிராகவும் மத்திய அரசு செயல்படுவது வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. கருகும் பயிரை பார்த்து கண்ணீர் விட்டு கதறி கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை பார்த்து கர்நாடக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி மனிதநேயமற்றதாகும். இதுகுறித்து முதலமைச்சர் வாய் திறக்காமல் மௌனம் காப்பது காவிரி விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
அவரது கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவ்வபோது மறுப்பு தெரிவிப்பாறேயானால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும். ஆனால் அதை விட்டு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது.
இதுகுறித்து அடுத்த கட்ட தீவிர போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் நாளை 13.09.2023 காலை 10 மணிக்கு தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் சரபங்கா திட்டத்திற்கு எதிராக திறந்தவெளி கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் இன்று (12.09.2023) நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தி.மு.க அரசின் தூண்டுதலால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பது வெளிப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க அரசுக்கு எதிராக களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது உடன் இருந்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.