விவசாயிகள் செய்த குருவை சாகுபடி கருகியதால் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என பி.ஆர். பாண்டியன் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர். பாண்டியன் திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலம். மாவூர், கச்சனம். வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குருவை சாகுபடி பாதிப்பை பார்வையிட்ட பின் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காவிரி டெல்டாவில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று 5 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலம் குருவை சாகுபடியை மேற்கொண்டனர்.
காவிரி நீர் பற்றாக்குறையால் ஒட்டுமொத்த டெல்டாவும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. குருவை சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பயிர்கள் கருகுவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். இனி குருவையை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. உடனடியாக உயர்மட்ட குழுவை முதலமைச்சர் அனுப்பி வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.
மூன்றாவது ஆண்டாக குருவை காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாமல் தமிழக அரசு கைவிட்டதால் விவசாயிகள் காப்பீடு செய்து இழப்பீடு பெற முடியாத நிலையில் பாதிப்பிற்கு தமிழக அரசே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.
தமிழ்நாடு வணிகர் நல வாரியம் முதலமைச்சர் தலைவராகவும் வணிகவரித்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும் கொண்டு உருவாக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானதாகும்.
வணிகர்கள் தன்னுடைய தேவைகளையும், கோரிக்கைகளையும் வெளிப்படையாக விவாதித்து அரசுக்கு முன்மொழிய வேண்டிய நிலையில் முதலமைச்சரே தலைமையேற்று செயல்பட நினைப்பது வணிகர்களின் குரல்வலையை நெரிப்பதாகும்.மேலும் நடைமுறைக்கு புறம்பானதாகும்.
கோயம்பேடு போன்ற மிகப்பெரும் சந்தைகளுக்கும், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் அமைப்புகளுக்கும் கூட நல வாரியத்தில் உறுப்பினருக்கு உரிய வாய்ப்பளிக்காமல் மறுக்கப்பட்டிருப்பது வணிகர்களுடைய ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக உள்ளது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக வணிக நல வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வணிகர்களைக் கொண்ட நல வாரியமாக மாற்றிட மற்ற வாரியங்களை பின்பற்றி செயல்படுத்திட முன்வர வேண்டும்.
உழவர் நலவாரியத்தையும் உழவர்களைக் கொண்டு அமைத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த சந்திப்பின்போது, மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில் குமார் மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தராஜ் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பஞ்சநாதன் திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் அக்ரி அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"