சம்யுக்த்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) SKM (NP) தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தஞ்சாவூரில் இன்று மாநில மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
சம்யுக்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் சார்பில் கடந்த 2024 பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லிக்கு டிராக்டர் பேரணியாக தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் டல்லேவால் தலைமையில் புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் - ஹரியானா மாநில எல்லையான கணூரி பாடரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரமான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2024 அக்டோபர் மாதம் பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் நவாப் சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது. அக்குழு இந்தியா முழுமையில் உள்ள விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு நவம்பர் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி உடனடியாக மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்து தற்கொலையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற இக்குழு பரிந்துரை செய்தது.
நவாப்சிங் குழு பரிந்துரையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 2024 நவம்பர் 26 முதல் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜீத் சிங் டல்லவாள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கணூரி பார்டரில் நடத்தி வருகிறார். இவருடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்திய உச்சநீதிமன்ற குழு மத்திய அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதனை அடுத்து மத்திய அரசின் செயலாளர்கள் தலைமையிலான குழுக்கள் சந்தித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்படி பிப்ரவரி 14ஆம் தேதி சண்டீகரில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் முதல் கூட்டம் நடைபெற்றது. பிறகு பிப்ரவரி 22 ல் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சௌகான், பியூஸ்கோயல், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் தலைமையில் இரண்டாவது கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரையிலும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாத நிலையில், வரும் மார்ச் 19ஆம் தேதி மூன்றாவது கூட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஜக்ஜித் சிங் டல்லவாள் வரும் மர்ச் 5ம் தேதி 100 நாட்கள் கடந்து போராட்டத்தை தொடர உள்ளார். இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு உடனடியாக நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேசம் தழுவிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளனர். இதனை ஏற்று தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மார்ச் 5-ல் ரயில் நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தமிழக தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற உள்ளது. நான் (பி.ஆர் பாண்டியன்) பங்கேற்று துவக்கி வைக்க உள்ளேன். போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் திருப்பதி வாண்டையார், தஞ்சை மண்டல தலைவர் துரை பாஸ்கரன்,தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஊரணிபுரம் ரவிச்சந்திரன், செயலாளர் பிரபாகர், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் குரும்பூண்டி பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.