திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி (ONGC) வளாகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு மூடுவதற்கான கண்காணிப்பு குழு கூட்டம் மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
பெரியகுடியில் இயற்கை எரிவாயு கச்சா எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கிணறுகள் தோண்டும் பணி நடைபெற்றது. பணி நிறைவுறும் தருவாயில் 2013 ஏப்ரல் 6 ஆம் தேதி கட்டுக்கடங்காத ஹைட்ரோ கார்பன் எரிவாயு வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதனை அறிந்து விவசாயிகளோடு நேரில் பார்வையிட்டு நள்ளிரவு 12 மணிக்கு தற்காலிகமாக அடைக்கப்பட்டது.
அப்போது அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது ஆசியாவிலேயே அதிக அடர்த்தி கொண்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு இங்கு உள்ளது. கச்சா எடுப்பதற்காக தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து எதிர்பாராத நிலையில் கட்டுக்கடங்காத எரிவாயு பீறிட்டு வெளியேறி தீப்பற்றி எரிய தொடங்கியது. அதனை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதனை சுற்றி எட்டு இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டு அடர்த்தியை குறைத்து எரிவாயு வணிக நோக்கத்தோடு விற்பனைக்கு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டோம்.பொய் வழக்குகள் போடப்பட்டு இதுவரையிலும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் (பி.ஆர் பாண்டியன்) வழக்கு தொடர்ந்தேன்.
வழக்கு விசாரணையின் போது ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வழக்கில் ஆஜராகி வாதாடி இக்கிணறு சட்டவிரோதமானது. ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க அனுமதிக்க கூடாது. ஒட்டுமொத்த காவிரி டெல்டாவும் பேரழிவை சந்திக்கும். எனவே, இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்க்கும் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்று நீதி அரசர் ஓ.என்.ஜி.சி-க்கு தடை விதித்தார்.
இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் கொள்கை பூர்வமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக கூறி ஓ.என்.ஜி.சி-க்கான தடையை நீக்குவதற்கு கோரினர்.இதனை ஏற்று நீதிமன்றம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. தொடர்ந்து மூடுவதற்கு மறுத்து ஓ.என்.ஜி.சி நிர்வாகம் அவ்வபோது வணிக நோக்கோடு செயல்படுத்துவதற்கும் மறைமுகமாக நடவடிக்கையில் ஈடுபட்டது. இதற்கு எதிரான பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வந்தோம். கடந்த 2023 டிசம்பர் மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று கிணறை மூடுவதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அனுமதியை பெற்று கிணறு மூடுவதை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு கிணறை மூடுவதற்கு கடந்த நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து ஓ.என்.ஜி.சி வளாகத்தில் இன்று நடைபெற்ற கண்காணிப்பு குழு 2வது கூட்டத்தில் நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு நாளை ஜனவரி 21 முதல் கனரக வாகனங்களை கொண்டு வந்து மூடும் பணியை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 7000 மீட்டர் அளவு வரையிலும் உள்ளே கிணறு மூடும் பணி முடிந்த பிறகு விளைநிலங்கள் விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைப்பு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இது விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜாபர் அலி லாரி விட்டு ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலை குற்றவாளிகள் காவல்துறையிடம் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் இது குறித்து உரிய விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். உடனடியாக குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒட்டுமொத்தமாக கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடுகிற போராளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வதை இச்சம்பவம் வெளிப் படுத்துகிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளை போராளிகளுக்கு வழங்கிட வேண்டுகிறேன்.
கூட்டத்தில் ஒஎன்ஜிசி அதிகாரிகள் மாறன், தங்கமணி, வட்டாட்சியர் கார்த்திகேயன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராவணன், ஒன்றிய தலைவர் எஸ் வி கே சேகர், இராஜேந்திரன் ரபீக் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். கோட்டூர் காவல் ஆய்வாளர் மோகன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.