திறந்தவெளி கிடங்குகளை திறந்து கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட வேண்டும் என தமிழக முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்
பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் வேளாண்துறையில் வேளாண் உதவி இயக்குனர்கள் காலிப் பணியிடம் அதிகரித்துள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 10 உதவி வேளாண் இயக்குனர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கும் வேளாண் துறைக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை கொடுப்பதற்காக தமிழ்நாடு வேளாண் துறை மூலம் விளைநிலங்கள் குறித்து கணினி பதிவேற்றம் நடைபெற்று வருகிறது. தமிழக நிலப்பரப்பில் 60 சதவீதம் கோவில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களை குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல. குத்தகை விவசாயிகளுக்கும் உரிய அடையாள அட்டை வழங்குவதற்கான கணினி பதிவேற்றம் செய்திட தமிழக அரசு அவசரகால நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் மிகப்பெரும் பிரச்சனைகள் தீவிரமடையும். விவசாயிகள் ஒற்றுமை சீர்குழையும் என எச்சரிக்கிறேன்.
நேரடி நெல் கொள்முதல் நிலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் திறந்தவெளி கிடங்குகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனை கடந்த இரண்டு ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் தற்போது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் அறுவடை துவங்கி உள்ளதால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலைய வாயில்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சிப்பங்கள் வரையும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொட்டி வைத்து கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் தடைபட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்து திறந்தவெளி கிடங்குகளை திறந்து நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட அரசு முன்வர வேண்டும். உணவுத்துறை போன்ற துறைகளில் அதிகாரிகள்பணியிட மாற்றம் என்கிற பெயரில் உயர் அதிகாரிகள் பந்தாடப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்து.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விசுவநாதன், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.