சம்யுத்த கிசான் மோர்ச்சா அரசியல் சார்பற்ற (SKM (NP) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு ஜக்ஜித் சிங் டல்லேவால் தலைமையில் லுதியானாவில் விவசாயிகள் மகாசபை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:
மத்திய அரசு விவசாயிகள் தேசம் தழுவிய அளவில் நடத்தும் போராட்டத்தை மதிக்க மறுக்கிறது. மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால் எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பஞ்சாப் மாநில அரசை தூண்டிவிட்டு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கைது செய்து சிறையில் அடைத்தது.
பிறகு 4வது கட்ட பேச்சு வார்த்தையில் பஞ்சாப் மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்றால் தான் பேச முடியும் என்று தவிர்த்து விட்டது. விவசாயிகளை கைது செய்து போராட்டத்தை முடக்க நினைத்த பஞ்சாப் அரசு பேச்சுவார்த்தையில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தினோம். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசு பங்கேற்காமல் கூட்டம் நடத்த முடியாது எனக் கூறி பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டது.
அப்படி கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் எனக்கூறுவது உண்மையாக இருக்குமேயானால், அனைத்து மாநில முதலமைச்சர்களையும் டெல்லிக்கு அழைத்து விவசாயிகள் சங்க தலைவர்களையும் நேரில் அழைத்து பேசி தீர்வு காண முயற்சிக்க மறுப்பதின் மர்மம் என்ன?
இன்று வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்தநாள் விழாவில் டெல்லியில் பங்கேற்கும் பிரதமர் மோடி அவரது பரிந்துரையை நிறைவேற்ற மறுப்பது நியாயமா?
ஏதோ ஒரு சம்பிரதாய சடங்குகளை சொல்லி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கக் கூடாது என்கிற உள்நோக்கத்தோடு கார்ப்பரேட்டுகளின் அடிமையாக மத்திய அரசு செயல்படுவது வெளிப்படுகிறது.
பாராளுமன்றத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக வேளாண்துறை அமைச்சர் சிவராஜ்சிங்சவுகான்பதில் அளிக்கும் போது, மோடி அரசு எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை கணக்கிட்டு வழங்கி வருவதாக உண்மைக்கு புறம்பாக பேசி இருக்கிறார். இதன் மூலம் சிவராஜ் சிங் சவுகான் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது.உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏற்க மறுத்து இதுவரையிலும் விலை நிர்ணயம் செய்யவில்லை. பேச்சுவார்த்தையும் தொடரவில்லை என்பதை மறந்து பேசுகிறார்.
பிரதமர் மோடிக்கு இணையான தலைவர்கள் உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை என்று தங்களை தாங்களே பாராட்டிக் கொள்கிற மத்திய அரசு இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அடிபணிந்து மௌனம் காப்பது ஏன்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வேளாண்மைக்கான இடுபொருட்கள் விலை உயரப் போகிறது.ஏற்றுமதி செய்யும் வேளாண் பொருள்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதிக்க தொடங்கியுள்ளது. நமக்கென்று தற்சார்பு கொள்கை இல்லாத நிலை இன்றைக்கு பேராபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்வார்கள். அது போல நம் பிரதமர் இனி வரும் நாட்களில் அனைவரும் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வாங்குவோம் என இப்போதுதான் பேசத் தொடங்கி இருக்கிறார்.
அவர் பதவியேற்றது முதல் பாராளுமன்றத்தையும் நம்பவில்லை இந்திய மக்களையும் விவசாயிகளையும் நம்பவில்லை மாறாக உலக நாடுகளில் நம்பி அவரது பயணங்கள் அமைந்தது.அதன் விளைவு இன்று அமெரிக்க அதிபர் நமக்கு உத்தரவு பிறப்பக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
தொழில் புரட்சி என்கிற பெயரில் விளைநிலங்களை மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பந்த செய்து கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்டம் போட்டு கையகப்படுத்தப்படுகிறது.பஞ்சாப் மாநிலத்திலும் விளைநிலங்கள் அபகரிக்கும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.இதன் மூலம் மீண்டும் நிலம் கொடா இயக்கம் என்கிற மறு சுதந்திரப் போராட்டத்தை இந்தியாவில் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகத்தில் உணவுக்குத் தான் பஞ்சம் உள்ளது. காருக்கோ, வாகனங்களுக்கோ,இயந்திரங்களுக்கோ பஞ்சமில்லை. ஆனால் அரசாங்கங்கள் உணவு உற்பத்தி செய்யக்கூடிய விளைநிலங்கள் முழுமையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும்.
உற்பத்தி பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.உரிய சந்தை வசதி ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து நாட்டின் நலன் கருதி விவசாயிகள் போராடி வருகிறோம். நாட்டின் மீதும், வாழக்கூடிய மக்கள் மீது மோடி அரசுக்கு அக்கறை இருக்குமேயானால்
எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும்.அதற்கான இறுதி கட்டப் போராட்டத்தைதான் விவசாயிகள் இந்தியா முழுமையிலும் ஒன்றிணைத்து போராடி வருகிறோம். அதனை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக இன்றைக்கு ஒன்று கூடி இருக்கிறோம். நம் போராட்டம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓயாது எனஎம் எஸ் சுவாமிநாதன் பிறந்த நாளில் சபதமேற்போம் என்றார்.
க.சண்முகவடிவேல்