திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே மங்களூர் கிராமத்தில் நீர்ப்பாசன துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையை மறுசுழற்சி செய்யும் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இதனை அறிந்த விவசாயிகள் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் இன்று ஏரியை நேரில் பார்வையிட்டனர். பின்னர் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேரூராட்சி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள குப்பை கிடங்கு அமைப்பதற்கான இடம் ஏரியின் நீர் பிடிப்பு மற்றும் சேமிப்பு பகுதியாகும். மேலும் தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏரியிலிருந்து 100 மீட்டர் அப்பால்தான் குப்பை கிடங்கு அமைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்கல் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட புகார் மனு குறித்து உரிய விளக்கம் கேட்கப்பட்டது. அதனடிப்படையில் அளந்து ஆய்வு செய்து பேரூராட்சியால் தேர்வு செய்யப்படும் குப்பை கிடங்கு அமைக்கும் இடம் நீர்ப்பாசனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், இங்கு கட்டுமான மேற்கொள்ளப்பட்டால் நீர் வளம், நிலவளம், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என தெரிவித்து ஏரியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு இயலாது என பதில் அளிக்கப்பட்டுள்ளது என நீர்பாசனத்துறை உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.
இதனை ஏற்று மாற்று இடத்தில் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான முத்துப்பேட்டை கடல் முகத்துவார பகுதியாகும். 200 ஏக்கர் பரப்பளவில் மங்களூர் ஏரி நீள் சதுரத்தில் உள்ளதால் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுவது தடுக்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஏரிக்கு பாமணி ஆற்றிலிருந்து இறவை பாசனத் திட்டத்தின் மூலம் நீர் நிரப்பி பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இதனைக் கொண்டு சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் சட்டவிரோதமாக முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை மறுசுழற்சி செய்வதற்கான கட்டுமானங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒப்பந்தக்காரரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு இயற்கைக்கு எதிரான நடவடிக்கையில் காவிரி டெல்டாவில் ஈடுபட தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதனை எதிர்த்து தொடர் போராட்டங்களை தீவிர படுத்தியுள்ளோம்.
முதலமைச்சர் தலையிட்டு உடனடியாக நீர் வளங்களை பாதுகாக்க வேண்டும். நீர் பாசனத் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். நீர் நிலைகளில் ஆக்கிரப்புகளை கைப்பற்ற வேண்டும். இவ்வாறு பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் முத்துப்பேட்டை வருவாய் வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், நீர்ப்பாசனத் துறையின் உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் மாங்குடி வெற்றி, கோட்டூர் ஒன்றிய துணைத் தலைவர் பெருவை அன்பழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நனலூர் செந்தில்குமார், மங்களூர் பகுதி விவசாயிகள் செல்ல பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் திரளாக பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்