/indian-express-tamil/media/media_files/2025/06/16/psJOyLO6WPSipzUt2RE5.jpg)
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள மணல் கதவனை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழக முதலமைச்சர் கல்லணையில் தண்ணீரை திறந்து வைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பாரம்பரிய மரபை மீறி சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கல்லணையை திறந்து வைத்தது விவசாயிகள் மனதை பாதிக்கிறது. விவசாயம் செழிப்பதற்கான பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு சூரிய உதய நேரத்தில் திறப்பது தான் பாரம்பரியமாக பின்பற்றி வருகிறது. மரபுகள் மாற்றப்பட்டதை ஏற்க இயலாது. கொள்ளிடத்தில் வெள்ள மணலில் கதவணை அமைத்து கடல் நீர் உட்பகுவதை தடுக்க வேண்டுமென நீண்ட நாட்களாக போராடி வருகிறோம். இதுவரையிலும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது. அதனை உடனே நிறைவேற்ற வேண்டும்.
ஆதனூர் கதவனை அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைய போகிறது. அதன் அருகிலேயே மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பாசனம் பெறும் தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே ஏற்பட்ட தடைகள் நீக்கப்பாடாததால் நான்காண்டு காலமாக பாசனம் பெற முடியாமல் பாதிக்கப் பட்டுள்ளனர். கதவணைக்கு கையகப்படுத்த நிலங்களுக்கான உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கான தொகையும் விடுவிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு நிர்வாக காரணங்களை சொல்லி இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெற்கு ராஜன் வாய்க்கால் பகுதிகளில் இருக்கிற தடையை அகற்றுவதற்கு அனுமதிக்கவில்லை. இது குறித்து தஞ்சை மாவட்ட நிர்வாகத்தோடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் புதிதாக அமைக்கப்பட உள்ள படுக்கை அணை மிகப் பெரும் பேராபத்தை உருவாக்கும். எனவே அதனை மாற்றி கதவணையாக திட்டமிட வேண்டும். காவிரி டெல்டாவில் கதவணைகள் சீரமைப்பு பணிக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் அரசாணை வெளியிட்டு நிதி வழங்கப்படவில்லை. உடனே வழங்க வேண்டும்.
தேசிய மாமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வில்லை.கூட்டுறவு வங்கியில் சிவில் ஸ்கோர் கேட்டு மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.
ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சிபில் ஸ்கோர் பார்க்க மாட்டோம் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டார். ஆனால் பதிவாளர் சுற்றறிக்கையின்படி மாவட்ட இணை பதிவாளர்கள் தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு சிபில் ஸ்கோர் பார்த்து உறுதி செய்யப்பட்ட பிறகுதான் கடன் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதனை காரணம் காட்டி கடன் கொடுக்க மறுக்கப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநில அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ 15000 ம் ஊக்க நிதியாக வழங்குகிறது. தெலுங்கானா அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 15,000 ம் வழங்குகிறது.தமிழக அரசும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் ஏற்க மறுக்கிறது.
குறுவை தொகுப்பு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு தலா ஒரு ஏக்கருக்கு மட்டுமே வழங்க முடியும் என்று அறிவிப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மேட்டூர், கல்லணையில் தண்ணீரை திறப்பதால் விவசாயம் விளைந்து விடாது. உற்பத்தியில் பங்கேற்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். அது முழுமையாக விவசாயிகளை சென்று சேரும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை மண்டல செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன், தலைவர் முருகன், ராஜா.உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் விவசாயிகள் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.