இன்று (மார்ச் 8) மன்னார்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது, "கர்நாடக முதலமைச்சர் சட்டமன்ற கூட்டத்தில் திடீரென மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், மத்திய அரசு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் அணைக்கட்டுமானப் பணி தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அவமதிக்கும் நடவடிக்கையாகும்.
இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக புதிய அணைகள் கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு உரிமை இல்லை குறிப்பிட்டுள்ளது. இது குறித்தான வழக்குகள் விசாரணையில் உள்ளது. அணைகளின் நீர் நிர்வாகம் முழுமையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உச்ச நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக சித்தராமையா தெரிவிப்பதும், மத்திய அரசு மௌனம் காப்பதும் அரசியல் லாபத்திற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். கர்நாடகாவை சார்ந்த வாட்டாள்நாகராஜ் போன்றவர்கள் கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே கலவரத்தை உருவாக்கும் உள்நோக்கத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ் திரைப்படங்கள் கர்நாடகாவில் திரையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என பேசி இருப்பதற்கு பின்னால் கர்நாடக முதலமைச்சர் உள்ளாரோ? என்று நினைக்கத் தோன்றுகிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மௌனம் காப்பது கர்நாடகாவில் வாழக்கூடிய தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
கர்நாடகாவில் மாண்டியா, சாம்ராஜ்நகர் போன்ற காவிரி பாசன பகுதி மாவட்ட விவசாயிகள் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உள்ளனர். மேகதாது அணையை கட்டினால் பற்றாக்குறை காலத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் தேக்குவதை கைவிட்டு, குடிதண்ணீர் என்ற பேரில் மேகதாதுவில் சேமிக்கப்படும். இதனால் கர்நாடகா விவசாயிகளுக்கு பயன்தராத வகையில் அமைந்துவிடும். எனவே, மேகதாது அணை கட்ட கூடாது என மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு ராசி மணல் அணை கட்டினால், பெங்களூர் நகரத்துக்கான குடிதண்ணீரை இறவை பாசன திட்டத்தில் கொண்டு செல்ல முடியும் என்கிற ஒப்புதலும் கொடுத்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக முதலமைச்சரின் பேச்சு கர்நாடக விவசாயிகளுக்கு எதிரான கருத்தாக உள்ளது. மேலும், தமிழ்நாடு - கர்நாடகா இடையே கலவரத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது" எனக் கூறினார்.
செய்தி - க. சண்முகவடிவேல்