/indian-express-tamil/media/media_files/93rptIyYZU7BXfhfvx6q.jpg)
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்து விவாதித்து பெரும்பான்மை அடிப்படையில் அணை கட்டுவதற்கு சாதக பாதகங்கள் குறித்து மத்திய அரசின் அனுமதி கோரியிருப்பது சட்டவிரோதமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவாதத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று தன் கருத்தை பதிவிட்ட தமிழ்நாடு அரசு கூட்டத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். அப்படி வெளியேறி இருந்தால் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புக் கொண்டதாக கருத்தை பதிவேற்றம் செய்து மத்திய அரசின் நீர் உள்ள ஆணையத்திற்கு அனுப்பி இருக்க முடியாது.
சட்டமன்றத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் சில அயோக்கியர்கள் மேகதாது அணைக்கட்ட தமிழக அரசு ஒப்புக் கொண்டதாக தவறாக பதிவிட்டு அனுப்பி விட்டார்கள் என ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து விட்டு பொருப்பை தட்டிக்கழிக்க முடியாது.
அதே நேரத்தில் சட்டமன்றத்தில் ஆணையத்தின் தவறை சுட்டிக்காட்டி தீர்மானத்தை நிராகரிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? ஆணையை முடிவை சட்ட விரோதமான அறிவிக்க வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் புறக்கணித்தது ஏன்? இனியும் காலம் கடத்தினால் பெற்ற உரிமையை மீண்டும் திமுக அரசு பழி கொடுத்து விடும் நிலை ஏற்படும்.
எனவே, உடனடியாக அவசரமாக அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கும்.உச்ச நீதிமன்றத்திற்கும் தெரிவித்து அவசர தடை ஆணை பெற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளையும் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன்.
உணவு அமைச்சர் சக்கரபாணி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 விரைவில் கிடைக்கும் என்று சொல்லி இருப்பதும். மத்திய அரசு பத்தாண்டுகளில் இரெட்டிப்பு விலை கொடுத்திருக்கிறோம் என்று சொல்வதும் விவசாயிகளை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல. கூட்டு சேர்ந்து விவசாயிகளை பழிவாங்குகிறதோ? என்று அஞ்ச தோன்றுகிறது. உடனடியாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 3,500 வழங்க முன்வர வேண்டும். மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை உள்நோக்கத்தோடு சித்தரிக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும்.
கடந்த விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான சட்டத்தை கொண்டு வராமல் காலங்கடத்துவது ஏன்? பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதால் தான் தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீதி கேட்டு விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். எனவே, விவசாயிகளின் போராட்டத்திற்குள் தீவிரவாதிகள், அரசியல்வாதிகள் பின்புலமாக இருக்கிறார்கள். என்று தவறான விமர்சனங்கள் செய்வதை கைவிட்டு விட்டு, கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார். இந்த சந்திப்பின்போது பொதுச்செயலாளர் வி. கே.வி.துரைசாமி, சென்னை மண்டல செய்தி தொடர்பாளர் சைதை சிவா, செய்தி தொடர்பாளர் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.