தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மூத்த தலைவர்
ஏவி துரைராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார். பின்னர் கூட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவிரி டெல்டாவில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று பருத்தி எள் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்தனர். எதிர்பாராத கோடமழையால் பேரழிவு ஏற்பட்டுளளது. வெளிப்படையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.
குடிமராமத்து திட்டத்தை உடன் செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் செயல்படுத்தப்படாததால் கிடைக்கும் மழை நீரை சேமிக்க முடியாமல் குளம் குட்டைகள் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது.
இந்தியாவில் அரிசி உற்பத்தியில் 2வதுஇடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி பின்னடைவை சந்திக்கிறது. வேளாண் துறை இயக்குனர் முருகேஷ் ஐஏஎஸ் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார். வேளாண் துறை செயல்பாடுகளை முடக்கி வருகிறார். உடனடியாக அவரை பணியிடமாறுதல் செய்திட வேண்டும்.
தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் பறிபோவதற்கு பொறுப்பேற்று நீர்ப்பாசன துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனாவை பணியிட மாற்றம் செய்திட வேண்டும். தமிழ்நாடு நீர் பாசன முறைகளில் புலமை வாய்ந்த மூத்த அதிகாரியை செயலாளராக நியமிக்க வேண்டும்.
காவிரி நதி டெல்டா விவசாயிகளின் வாழ்வியலோடு இணைந்ததாகும் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பது காவிரி டெல்டா விவசாயிகளுடைய உரிமையாகும். நிலுவை தண்ணீரை கர்நாடகாவிடம் பெற்று ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற இருக்கின்ற பூம்புகாரில் ஜூன் 10ல் புறப்பட்டு ஜீன் 12ல் மேட்டூர் நோக்கி செல்லும் பேரணியில் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க முடிவெடுக்கப்பட்டது என்றார்.
மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர்,மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில்குமார். நாகை மாவட்ட தலைவர் புலியூர் பாலு,செயலாளர் தலைஞாயிறு கமல் ராமன், கௌரவ தலைவர் வேதை கருணநாதன், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேஷ், செய்தி தொடர்பாளர் மணிமாறன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“