Mannargudi | PR Pandian | தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை சாகுபடி மின்சார தட்டுப்பாட்டால் கருகி வருவதை பார்த்து விவசாயிகள் மனமுடைந்துள்ளனர்.
குறிப்பாக 120 கிலோ வாட் மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டிய நிலையில் . 90 கிலோ வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை உடன் சீர் செய்து கருகும் பயிர்களை பாதுகாக்க வேண்டும். மறுத்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறேன்.
குறிப்பாக ஒரத்தநாடு . நீடாமங்கலம், பேரையூர் பகுதிகளில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீர்வு காண முன்வர வேண்டும்.
காவிரியின் 28-வது ஆணைய கூட்டத்தில் மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசின் வலியுறுத்தலை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா மறுப்பு தெரிவித்ததையடுத்து கர்நாடகம் ஒதுங்கிக் கொண்டது.
இந்நிலையில் மத்திய அரசினுடைய பிரதிநிதிகள் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி அணை கட்டுமானத்திற்கு ஆதரவான கருத்து கோரியதை ஏற்று ஆணைய தலைவர் மத்திய அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் மறுப்பு தெரிவித்து கூட்டத்தில் வெளியேறி இருக்க வேண்டும். மாறாக பங்கேற்றதால் மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசே உருவாக்கி விட்டது.
இதனால் பெற்ற உரிமை பரிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களது வேண்டுகோளை ஏற்று கேரள முதலமைச்சர் 2022ல் மேகதாட்டு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த 28 வது கூட்டத்தில் கேரளா ஆதரவோடு இத்தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக கூட்ட பதிவு அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனை சட்ட விரோதம் மட்டுமின்றி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது என அறிவித்து நிராகரிக்க வலியுறுத்தி சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி நிராகரிக்க வலியுறுத்தினோம். முதலமைச்சர் இதுவரையில் ஏற்கவும்வில்லை. வாய் திறக்கவும் இல்லை.
இந்நிலையில் நாளைக்கு 29- வது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் நிராகரிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் சார்பில் கடிதம் கொடுத்து வலியுறுத்த வேண்டும்.ஏற்க மறுத்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதனை நிராகரிக்க முன்வர வேண்டும்.
இது குறித்து அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு மேகதாட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“