தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். குத்தகை விவசாயிகள் சாகுபடி உரிமையை உறுதிப்படுத்தி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 8-ல் மயிலாடுதுறையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தமிழகம் முழுமையிலும் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிலோ 3 ரூபாய்க்கு கூட விற்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குளிர்பான உற்பத்தி செய்யும் கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக தர்பூசணியில் செயற்கை கலர் உருவாக்குவதாக கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி பயன்பாட்டை தடுத்துள்ளனர். இப்பாதிப்புக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். எனவே, தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடாக வழங்கி விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு எதிராக விரைவில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். தமிழகம் முழுமையிலும் கோவில், அறக்கட்டளைகள், ஆதீனங்களுக்கு சொந்தமான குத்தகை, விவசாயிகள் குத்தகை, உரிமை குத்தகை பாக்கியை காரணம் காட்டி குத்தகை பறிக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பாளர்கள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால், தமிழக அரசு வழங்கும் அடையாள அட்டை 60% பேர் பெற முடியாத தகுதியை இழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது வேதனை அளிக்கிறது.
பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டு குத்தகை செலுத்த முடியாத விவசாயிகள் நிலங்களின் குத்தகை நிலுவையை காரணம் காட்டி குத்தகை பதிவை ரத்து செய்து நில வெளியேற்றம் என்கிற பெயரால் விவசாயிகளை வஞ்சித்து வருவதை ஏற்க முடியாது. குத்தகை விவசாயிகளின் விளைநிலங்களை கோவில் சொத்து என்கிற பெயரில் அபகரிப்பாளர்கள் என நீதிமன்றம் அறிவிப்பு செய்வதற்கு எதிராக தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவித்து குத்தகை விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.
இதனால் தற்போது மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வழங்கப்படுகிற அடையாள அட்டையை பெறுவதற்கு தகுதி இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக குத்தகை விவசாயிகளின் குத்தகை பதிவை புதுப்பித்து அவர்களுக்கு நிபந்தனை இன்றி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு நிறைவு பெறும் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன் என இந்த செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக கேட்டுக்கொண்டார்.
க.சண்முகவடிவேல்