தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளோடு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காவிரியின் குறுக்கே ராசிமணல் அணை கட்டுவதால் ஏற்படும் தமிழகம், கர்நாடகத்திற்கான பயன்கள் குறித்தும், மேகதாட்டு அணை கட்டினால் தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு ஏற்படும் பேரழிவு குறித்தும் விவாதிப்பதற்காக கடந்த 22.10.2024 அன்று கர்நாடக மாநிலம் மைசூரில் இரு மாநில விவசாயிகள் சங்க தலைவர்கள் பங்கு கொண்ட கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் சார்பில் நான் (பிஆர்.பாண்டியன்), கர்நாடக சார்பில் குருபுரு.சாந்தகுமார் இருவரும் தலைமை ஏற்றோம். தமிழகம் சார்பில் நீர்ப்பாசனத் துறை வல்லுனர் எஸ் ஜனராஜன் உட்பட 23 பேர் பங்கேற்றனர். கர்நாடகா சார்பில் 100க்கு மேற்பட்ட முன்னனி விவசாயிகள் சங்கத் தலைவர்கள், பொருளாதாரம், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்குகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பெருபாலானோர் மேகதாது அணை கட்டப்பட்டால் மின்சார உற்பத்திக்கும், பெங்களூர் குடிதண்ணீர் அவசியம் குறித்து மட்டுமே பேசினர். எந்த ஒரு விவசாய சங்க தலைவரும் மேகதாது அணையால் விவசாயத்திற்கு பயன்படும் என்கிற கருத்தை முன் மொழியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் கர்நாடக மாநில சமவெளி பகுதிக்கு 1000ம் அடி கீழ்நோக்கி மேகதாது பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப் பகுதியில் மலை முகடுகளுக்கு இடையே அமைந்துள்ளதால் இங்கு தேக்கப்படும் தண்ணீர் குடிதண்ணீருக்கு மட்டுமே மிகுந்த பொருட் செலவில் கொண்டு சென்று பயன்படுத்த முடியுமே தவிர, விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது என்பதை அனைவரும் அறிந்து உள்ளனர்.
ஒரு சில தலைவர்கள் தமிழகத்தில் ராசிமணல் அணையை கட்டினால் கர்நாடகா குடி தண்ணீர் கேட்டு தமிழகத்திடம் கையேந்துவதா? கர்நாடகம் எந்த ஒரு திட்டத்தை முன்மொழிந்தாலும் தமிழ்நாடு நீதிமன்ற மூலம் தடுத்து விடுவதாக கோபத்துடன் எடுத்துரைத்தனர். மேலும் பற்றாக்குறை காலத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உரிய தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று போராடுவது நியாயம் இல்லை என்கிற கருத்தையும் முன் வைத்தனர்.
இதற்கு தமிழ்நாட்டின் சார்பில் வலுவான மறுப்பு தெரிவித்ததோடு, இரு மாநில அணைகளின் நீர் இருப்பு மற்றும் தேவை குறித்து கணக்கில் கொண்டுதான் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரை விடுவிக்க உத்தரவிடுகிறது என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தோம்.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே வருகிற தண்ணீர் சட்டப்படி தமிழ்நாட்டிற்கு மட்டுமே சொந்தமானது. இது கீழ்பாசன விவசாயிகளின் உலகலாவிய நீதியும் ஆகும். ஏற்கனவே ஐந்து அணைகளை கட்டி தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரை கர்நாடகம் தடுத்து விட்டது. உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு விடுவித்து உச்ச நீதிமன்றத்திற்கு கணக்கு காட்டி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
தமிழக எல்லையோரம் மேகதாது அணையைக் கட்டி தடுத்துவிட்டால் உபரி நீரும் தமிழ்நாட்டிற்கு வராது என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தோம். எனவே, இனி தமிழ்நாடு நோக்கி வரும் தண்ணீரை தடுத்து அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு சட்டப்படி உரிமை இல்லை என வலுவான கருத்தை எழுத்துப் பூர்வமாகவும் முன் வைத்தோம்.
எனவே இரு மாநிலங்களின் நன்மை, தீமைகள் குறித்து அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு மாநில பிரச்சனைகளையும் பேசி தீர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் இக்கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தினோம்.
கர்நாடக காவிரி பாசன விவசாயிகளான மாண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பாசனப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்க தலைவர்கள் அனைவரும் மேகதாது அணை கட்டினால் கர்நாடகா விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். காரணம் பெங்களூர் நகர குடிநீர் தேவையை காரணம் காட்டி மேகதாதுவில் தண்ணீரை கொண்டு சென்று தேக்குவதற்கு அரசு முதன்மைப்படுத்தும். இதனால் பற்றாக்குறை காலங்களில் கிருஷ்ணராஜசாகரில் தண்ணீரை தேக்கி விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்க முன்வர மாட்டார்கள் என்கிற கருத்து வலுவாக உள்ளது. இதனால் விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற பெரும் அச்சம் அப்பகுதி விவசாயிகளிடம் உள்ளதை அறிந்து கொண்டோம்.
நிறைவாக மேகதாதுவின் கீழே 500 அடி ஆழத்தில் அமைய பெரும் ராசிமணல் அணை பகுதி இரு மாநிலங்களுக்கும் மையமான பகுதியாகும். ஆற்றின் இடது கரை மற்றும் ஆறு, தண்ணீர் தமிழ்நாட்டிற்கு சொந்தம். வலது கரை கர்நாடகாவிற்கு சொந்தம் எனவே தமிழ்நாடு அரசு ராசிமணலில் அணை கட்டினால் கர்நாடகாவிற்கு தேவையான குடிதண்ணீரை நீரேற்று இயந்திரங்கள் மூலம் உரிமையுடன் கொண்டு செல்ல முடியும். மின்சார உற்பத்தி செய்து இரு மாநிலங்களும் பங்கிட்டு கொள்ள முடியும். இதற்கு எந்த தடையும் இருக்காது. எனவே இதனை நீங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
கூட்ட முடிவில் நிறைவான ஒத்தக் கருத்தாக ராசிமணல் திட்டம் கர்நாடகா அரசுக்கும், விவசாயிகளுக்கும் புதிதாக உள்ளது. இரு மாநிலங்களுக்கும் பாதுகாப்பான வகையில் அணை கட்டிக் கொள்வதற்கு பொருத்தமான இடமாக தெரிகிறது. எனவே, இது குறித்து இரு மாநில விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் வல்லுனர்கள் கொண்ட குழு ஜனவரி மாதம் நேரில் ஆய்வு செய்து ராசி மணல் அணை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டம் தமிழ்நாடு, கர்நாடக விவசாயிகளுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.
இனி காவிரி குடும்பம் என்கிற பெயரிலேயே பேச்சுவார்த்தையை தொடர்வது என இரு மாநில தலைவர்களும் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது. அரசியல் தலையீடின்றி விவசாயிகள் ஒத்த கருத்தை உருவாக்கி பேசி தீர்ப்பது என அனைவரும் ஒத்தக் கருத்தோடு ஏற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் ஒரு சில சுயநலவாதிகள் விவசாயிகள் சங்கத் தலைவர் என்கிற போலி வேஷத்தோடு 1500 அடி கர்நாடக சமவெளிப்பகுதிக்கு கீழே உள்ள ராசிமணலில் அணை கட்டினால் கர்நாடகம் முழு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் என்கிற தவறான ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான பரப்புரையில் ஈடுபடுவதை காவிரி குடும்பத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். பொய் பிரச்சாரத்தை முறியடித்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அர்ப்பணிப்பு உணர்வோடு போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் வேளாண் விலை நிர்ணய குழு தலைவர் பிரகாஷ், சுற்றுச்சூழல் துறை மூத்த வல்லுனர் சிவலிங்கப்பா, பேராசிரியர் பசவராஜ் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குடவாசல், மாநிலத் துணைச் செயலாளர் எம்.செந்தில் குமார். மன்னை ஒன்றிய தலைவர் பைங்கை குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாணலூர் செந்தில்குமார், உயர்மட்டக்குழு உறுப்பினர் காப்பனாமங்கலம் செல்வராஜ், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.தெய்வமணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.