தியாகிகள் தினம் தமிழக விவசாயிகள் மகாசபை கோவை பேரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. ஜக்கித்சிங் தல்லேவால் தலைமையில் தேசிய தலைவர்கள் 12 பேர் குழு பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) எஸ்.கே.எம் (என்.பி) தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர். பாண்டியன் கோவை எல் & என் டி பைபாஸ் அருகே நொய்யல் ஆற்றை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரத்திற்கு அழகு சேர்ப்பது நொய்யல் ஆறு ஆகும்.கோவை மாநகரத்தை ஒட்டிய மலைப்பகுதியில் உருவாகி கோவை மாநகரத்தை வலம் வரும் நொய்யல் ஆறு இன்று கழிவு நீர் கால்வையாக மாறி உள்ளது. சாயப்பட்டறை கழிவுகளும் மாநகரக் கழிவுநீரும் கலக்கச் செய்வதால் ஒட்டுமொத்த நொய்யல் ஆற்றங்கரையில் வசிக்கிற மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கள் ஏற்பட்டுள்ளது
இதனை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தாவிட்டால் கோவை மாநகரத்தை பாதுகாக்க முடியாது.நிலத்தடி நீரும் பறிபோகும் அபாயம் ஏற்படும்.
எனவே தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாநகரத்தில் நிரம்ப தொழில் நிறுவனங்கள் உள்ளது. தொழில் அதிபர்களை ஒருங்கிணைத்து நொய்யல் ஆறு பாதுகாப்பதற்கான பெருந்திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
இது குறித்து ஏற்கனவே ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் காவிரியை பாதுகாப்பதற்கு முன் தங்கள் மையத்தை சுத்தி கழிவுநீராக ஓடக்கூடிய நொய்யல் ஆறு பாதுகாக்க விவாதித்துள்ளோம். ஈஷா யோகா மையம் தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து நொய்யல் ஆறு பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.
ஜூலை 5ம் தேதி தியாகிகள் தின விழா தமிழகம் முழுமையிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வெள்ளிக்கிழமை கோவை பேரூர் யாதவர் திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு தியாகிகள் தின விழா மற்றும் SKM (NP) தமிழக விவசாயிகள் மகாசபை கூட்டம் நடைபெற உள்ளது.
தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங்தல்லே வால் இணை ஒருங்கிணைப்பாளர் அபிமன்யு கொஹார் உள்ளிட்ட 12 தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்க உள்ளனர்.
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்ஏ எஸ் பாபு உயர்மட்ட குழு உறுப்பினர் பா.அசோகன்,மகளிர் அணி செயலாளர் சுகன்யா,கல்பனா குறிச்சி சிதம்பரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.