உச்ச நீதிமன்ற குழு பரிந்துரையை ஏற்று குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வர வேண்டும். விவசாயிகளின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நாளை நடைபெறும் விவசாயிகளின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் எஸ்.கே.எம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர்.பாண்டியன் டெல்லியில் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: மத்திய அரசு வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெற வேண்டும். உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி சண்டிகரிலிருந்து டெல்லி நோக்கி அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (SKM NP) சார்பில் பேரணி புறப்பட்டோம். ஹரியானா மாநில எல்லையில் இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டு, சாலைகளின் குறுக்கே கான்கிரீட் சுவர்கள் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.
விவசாயிகள் மீது மத்திய அரசின் துணை ராணுவ படையும் ஹரியான மாநில காவல்துறையும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. விவசாயிகள் பலர் கொல்லப்பட்டார்கள். இதனை பொருட்படுத்தாத விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே 10 மாதங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து சாலையிலேயே தங்கி போராடி வருகிறார்கள்.
இந்தநிலையில் விவசாயிகள் பேரணியை தடுப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் நவாப்சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது. அக்குழு விவசாயிகளிடம் கருத்து கேட்டு கடந்த 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இடு பொருள்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு கூடுகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். எனவே, இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். விவசாயிகள் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதனை ஏற்று மத்திய அரசாங்கம் உடனடியாக நவாப்சிங் பரிந்துரையை நிறைவேற்ற முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை கண்னூரி பார்டரில் எஸ்.கே.எம் (NP) தலைவர் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளார். போராட்டத்தில் எனது (பி.ஆர்.பாண்டியன்) தலைமையில் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி டல்லேவால் மற்றும் விவசாயிகளோடு பிரதமர் மோடி உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இரண்டு தினங்கள் வரலாறு காணாத பெரும் மழை பொழிவு ஏற்பட உள்ளதாக வானிலை ஆய்வாளாக தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே வடிகால்கள், தூர்வாரப்படவில்லை. மத்திய அரசு காவிரி டெல்டா கடல் முகத்துவார ஆறுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான இரண்டாம் கட்ட நிதியை ஒதுக்கீடு செய்யாமல் காலங்கடத்தியது. இதனால் பெய்கின்ற வெள்ள நீர் முழுமையும் விளை நிலங்களில தேங்கி நின்று குடியிருப்புகளும் விளை நிலங்களும் அழியும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசுக்கு தேவையான வெள்ள நிவாரண பணிகளுக்கான நிதிகளை மத்திய அரசு தடை இல்லாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் கர்நாடகா குருபுரு சாந்தகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.