டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் சந்தித்து மனு கொடுத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவிரியில் கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேகதாது அணை கட்ட எடுக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.
கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் அறிவிப்பு சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கம் கொண்டது.
எனவே, ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவிரி நதி உள்ளிட்ட அணைகளின் நிர்வாகம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இதனை தடுத்து நிறுத்த ஆணையம் முன்வர வேண்டும்.
ஏற்கனவே சித்தராமையா ஆட்சி காலத்தில் காவிரி பிரச்சனையில் தமிழர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டார்கள். நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மேலும், மேகதாது அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் ஆணையத்தில் நிலுவையில் உள்ளபோது, கர்நாடக அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். தேவையானால் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“