/indian-express-tamil/media/media_files/2025/03/08/tNx06NOIve1Zznw3YDzI.jpg)
ஈக்விடாஸ் வங்கி மிரட்டலால் அவமானப்பட்ட வாழப்பாடி விவசாயி வடிவேல் தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை
பிஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, "சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பித்தியாம்பாளையம் கிராமத்தை சார்ந்த விவசாயி வடிவேலு வயது 50 என்பவர் ஈக்விடாஸ் வங்கியில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
அனைத்து தவணைகளும் முறையாக செலுத்தி வந்துள்ளார். நடப்பு மாத தவனை மட்டும் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. 15 நாட்கள் காலதாமதமாகி விட்டதால் நேற்று அவரது வீட்டிற்கு சென்ற வங்கி அலுவலர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஊர் மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த விவசாயி வடிவேலு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். தற்போது இவரது உடல் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வடிவேலு குடும்பத்தார்கள் மற்றும் விவசாயிகள் வங்கி அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக சட்டமன்றத்தில் கடன் வசூல் நடவடிக்கை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அதனை மீறும் வங்கியாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சட்டம் நிறைவேற்றி உள்ளது.
இதனை பின்பற்றி காவல்துறை உடனடியாக வங்கி அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். வடிவேலு குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி அவரது குடும்பத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.