/indian-express-tamil/media/media_files/2025/03/26/IJufN05mwUKYyWTOc01k.jpg)
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், சமயுத்த கிசான் மோர்சா தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர்.பாண்டியனை பஞ்சாப் அரசு கைது செய்து பட்டியாலா மத்திய சிறையில் அடைத்தது.
5 நாள் சிறைவாசம் முடிந்து இன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 200 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் வரவேற்பளித்தனர்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மத்திய அரசு அழைப்பின் பேரில் கடந்த 19ஆம் தேதி சண்டிகரில் நடைபெற்ற குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றோம்.
மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஸ்கோயல், பிரகலாத்ஜோஷி பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அனைவரும் அரங்கை விட்டு வெளியே வந்தோம். அப்போது பஞ்சாப் மாநில பகவந்த்மான் அரசு காவல்துறையை ஏவி விட்டு வலுக்கட்டாயமாக தீவிரவாதிகளை கைது செய்வது போல் கைது செய்து பட்டியாலா சிறையில் அடைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வகையில் ஆம் ஆத்மிகட்சி தலைமையிலான பகவந்த்மான் அரசு கைது செய்துள்ளது வெட்கக்கேடானது. ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைத்துள்ளது.
மத்திய அரசு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா முழுமையில் இருக்கிற வர்த்தகர்களுடைய கருத்துக்களை கேட்டு மே 4ம் தேதி அடுத்த கட்ட கூட்டத்தை நடத்துவதென முடிவு எடுத்த நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில் கைது நடவடிக்கையை பகவான் அரசு மேற்கொண்டது.
அரசியல் சுயநல நோக்கத்திற்காக ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும் கேவலப்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஸ்ரீ அய்யாக்கண்ணு ஈசன்,கோவை பாலு உட்படஅனைத்து தலைவர்கள் விவசாயிகள்
கைதை கண்டித்து தீவிரமான போராட்டத்தை நடத்தினார்கள்.
உயிரைப் பனையம் வைத்து போராட்டம் தீவிரமடைந்ததால், பஞ்சாப் அரசு என்னையும் (பி.ஆர்.பாண்டியன்) கேரள ஜானையும் விடுதலை செய்துள்ளது. இதற்காக அனைவருக்கும் பாதம் தொட்டு, வணங்கி நன்றி கூறுகிறேன்.
மற்ற தலைவர்களை தொடர்ந்து பல்வேறு சிறைகளில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறது.
இதனை எதிர்த்து வருகிற 28ஆம் தேதி இந்தியா முழுமையிலும் அனைத்து அமைப்புகளும் தீவிரமான போராட்டம் நடத்த உள்ளனர் என்றார்.
இந்திய நதிகள் இணைப்புச் சங்க நிறுவனர் பி.அய்யாக்கண்ணு தெரிவித்ததாவது, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொடுக்க மறுக்கிறது. கூட்டத்தில் நானும் பங்கேற்க எண்ணி இருந்தேன்.
ஆனால் தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததால் என்னால் பங்கேற்க முடியவில்லை. ம் இந்நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள் சிறையில் அடைத்து பகவான் அரசு கொடுமை செய்கிறது. மத்திய அரசு மறைமுகமாக இதற்கு துணை போகிறது.
மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்கள் அனைவரும் நிபந்தன இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெத்தீப் சிங் டல்லே வால 120 நாட்களைக் கடந்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவர் தற்போது மருத்துவ சிகிச்சையும் குடிதண்ணீர் அருந்துவதையும் மறுத்து விட்டார். இந்நிலையில் உயிருக்கு போராடும் அவரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி தேசம் தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் தமிழ்நாட்டிலும் மிக தீவிரமாக போராட்டத்தை நடத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரபடுத்துவோம். அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்றார். பஞ்சாபில் இருந்து திருச்சி வந்த விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் வரவேற்க 200க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் திருச்சி விமான நிலையத்தில் குவிந்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.