/indian-express-tamil/media/media_files/A3aMbN64oaFbjkUxWIWq.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
வி.எஸ்.வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியன் கூறுகையில், டெல்லியில் கடந்த பிப்ரவரி 13 முதல் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கொடுத்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்ற மறுக்கிறார். மாறாக போராடும் விவசாயிகளை ராணுவம், காவல்துறை கொண்டு துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்தால் விவசாயிகள் போராட்டம் இந்தியா முழுவதும் தீவிரமடையும். வரும் மார்ச் 10-ம் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் SKM (NP) வேண்டுகோளை ஏற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.
விவசாயிகளின் நியாயமான 13 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற முன்வர வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.
மின்சார ஒழுங்குமுறை சட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்டது, அதனை திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று செயல்படுத்த முன்வர வேண்டும். மறுத்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வரும் பாராளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் வாக்களிக்க தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தலைவர் எல்.பழனியப்பன்,மாவட்ட செயலாளர் எம்.மணி, கவுரவ தலைவர் திருப்பதி வாண்டையார், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தலைவர் ராமசாமி, மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.