நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான் தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை தான் தான் எடிட் செய்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து வந்தேன்.
அப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த செங்கோட்டையன், சீமான் உடன் நெருக்கமாக இருந்தவர். நான் அவருக்கு சில படங்களை எடிட் செய்து கொடுத்துள்ளேன். அப்படி ஒருமுறை கேசட் கொண்டு வந்து கொடுத்து, சீமான், பிரபாகரன் இருவரும் அருகருகே இருப்பது போல படம் வேண்டும் என்று கேட்டார்.
நான் எதற்கு என்று கேட்டதற்கு, "நாங்கள் அவருக்கு சர்ப்ரைஸாக பரிசு கொடுப்பதற்காக இந்த புகைப்படம் வேண்டும்" என்று சொன்னார். என்னால் முடிந்த அளவுக்கு அந்த படத்தை எடிட் செய்து இருவரையும் அருகருகே இருப்பதுபோல சேர்த்துக் கொடுத்தேன்.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல தற்போது கிடைக்கும் புகைப்படம் நான் உருவாக்கியது. இது தவிர பிரபாகரனுடன் சீமான் இருப்பதுபோல வேறு புகைப்படம் எதுவும் இணையத்தில் எங்குமே இல்லை. சீமான் பிரபாகரனை சந்தித்தாரா? அப்போது புகைப்படம் எடுத்தாரா? இல்லை சந்திக்கும்போது புகைப்படம் எடுக்கவில்லையா என்பது பற்றி நான் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.
பிரபாகரன் பெயரையே யாரும் உச்சரிக்காத சூழலில் நான் வந்தபிறகுதான் இங்கு பிரபாகரன் பெயரை உச்சரிக்கும் சூழல் உருவானது என சீமான் சொல்கிறார். அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்ற முறையில் நான் சங்கடப்பட்டிருக்கிறேன். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சீமான் சொல்லும் நிறைய தகவல்கள் உண்மைக்கு முரணானதாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
சங்ககிரி ராஜ்குமாரின் இந்த பேட்டிக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், "2009 லேயே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைம் டிராவல் செய்து வரைந்திருப்பான் போல அந்த டுபாக்கூர் பெரியாரிஸ்ட் சங்ககிரி ராஜ்குமார். மொத்தம் ஏழு புகைப்படங்கள் இருக்கு எதுடா நீ வரைந்தது?" என்று பதிவிட்டுள்ளார்.