திருநெல்வேலி கடந்த ஜன.21-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சீமானை விமர்சனம் செய்தார். அப்போது பேசிய அவர், “சீமான் பிரபாகரனைப் பற்றி பேசுகிறார். பிரபாகரனைப் பற்றி உனக்குத் தெரியுமா? 1983-க்கு முன்பாக பிரபாகரன் சென்னைக்கு வருகிறார். தியாகராய நகரில் அவருக்கும் இன்னொரு அணிக்கும் துப்பாக்கிச்சூடு நடக்கிறது. பிரபாகரன் கைது செய்யப்படுகிறார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு யாரும் ஆதரவு கிடையாது. காரணம் சென்னைக்கு வந்திருக்கிறார். ஜாமீன் கொடுக்க யாரும் கிடையாது. அப்போது, பிரபாகரன் கோர்ட்டுக்கு வருகிறார். அப்போது நான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளராக இருக்கிறேன். அப்போது கலைஞர் என்னை அழைத்து விடுதலைப் புலிகள் பிரபாகரனை ரிமாண்டுக்கு கொண்டு வருகிறார்கள். பிரபாகரனை எப்படியாவது நீ ஜாமீனில் எடுக்க வேண்டும் என சொன்னார்.
நான் பெயில் பெட்டிசன் போடுகிறேன். ஆனால், யாராவது உத்தரவாதம் கொடுக்க வேண்டுமே, உள்ளூர்காரர் கொடுத்தால்தானே ஜாமீன் கொடுப்பார்கள், நான் முயற்சி செய்கிறேன் என சொன்னேன்.
அது எப்படியோ தெரியாது, பிரபாகரன் ஜெயிலுக்குப் போகக்கூடாது என கலைஞர் உறுதியாக சொன்னார். அப்போது எம்.ஜி.ஆருடைய ஆட்சி. அந்த நேரத்தில் ரிமாண்டுக்கு கொண்டு வருகிறபோது, நீதிமன்றத்தில் பிரபாகரனுக்காக ஆஜர் ஆகியவன் திமுகவைச் சேர்ந்த இந்த ஆர் எஸ் பாரதி. நீதிபதியிடம் அவரை சொந்த ஜாமீனில் வெளியிட வேண்டும் என சொல்லி வாதாடி அவரை ஜாமீனில் எடுத்துவிட்ட அடுத்த நாள் அவர் இங்கிருந்து சென்றுவிட்டார். பிரபாகரனை கலைஞர் சொல்லி பெயிலில் எடுத்தது நான். நீ (சீமான்) பிரபாகரன் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறாய்” எனப் பேசினார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்துக்கு வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இது தவறான செய்தி. பிரபாகரனை பாண்டிபஜார் சம்பவத்தில்1982 ஆகஸ்டுஇல் பெயில் எடுத்தவன் அடியேன். நெடுமாறன் இருக்கிறார். அதில் ஒரு குற்றவாளி ரவிந்திரன் லண்டனில் உள்ளார். இன்றும் விகடன் ராவ், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், கல்கி ப்ரியன், தாரசு ஷ்யாம் போன்றவர்கள் உள்ளனர்.
தோழமை கட்சி தலைவர் வைகோவிடம் கேட்கவும். (வழக்கு எண் Sc no 2/1983 ) ஆவணங்கள் உள்ளன திரு ஆர்.எஸ். பாரதி அவர்களே." என்று பதிவிட்டுள்ளார்.