நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படம் தான் எடிட் செய்தது என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபாகரனின் அண்ணன் மகன் மனோகரன், சீமான் பிரபாகரனை சந்திக்கவில்லை. அந்த புகைப்படம் உண்மையில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நியூஸ் 18 தமிழுக்கு பேட்டி அளித்த அவரின் பிரபாகரனின் அண்ணன் மகன் கூறியது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், என் மகனுக்கு பிரபாகரன் பெரியப்பா. என்னை ஏற்றுக் கொள்ள பிரபாகரனின் அண்ணனின் மகன் யார்..
பல லட்சம் பேருக்கு பிரபாகரன் அண்ணன், சித்தப்பா, பெரியப்பாவாக உள்ளார். எல்லாவற்றிக்கும் மேல் அவர் தலைவர். அண்ணன், தம்பி உறவுகளுக்கு எல்லாம் இங்கு பிரச்சனை இல்லை. இலக்கு தான் முக்கியம். பிரபாகரனுக்கு ஏராளமான சொந்தங்கள் உள்ளன. அவரது கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிதில்லை என்றார்.
தேர்தல், போராட்டம், ஆர்ப்பாட்டம் என எதுவாக இருந்தாலும் எங்கள் கருத்தை மக்களிடம் விதைத்துக் கொண்டே இருப்போம் என்றார்.
இடைத் தேர்தல் நேரத்தில் பிரபாகரன் புகைப்படம், பெரியார் கருத்து வந்துள்ளது. இது தேர்தலில் எதிர் ஒலிக்குமா? என்ற கேள்விக்கு இது தேர்தலில் எதிர் ஒலிக்காது. நான் என் தலைவர் பற்றி பேசி வாக்குகள் பெற்றுள்ளேன். நீங்கள் அதை செய்து காட்டுங்கள். அதில் யார் வலிமையான தலைவர் என்று தெரியும் என்றார்.
தொடர்ந்து, நா.த.கவில் இருந்து தொண்டர்கள் விலகி தி.மு.கவில் இணைகின்றனர் என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், தி.மு.க எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை பார்க்க செல்கிறார்கள். இதனால் நாங்கள் பலவீனப்படுவோம் என நினைக்கிறார்கள். கிளைகள் விழுவதால் மரத்திற்கு வீழ்ச்சி அல்ல. புதிய கிளைகள் வரும். இது வளர்ச்சி தான் என்றார்.