சென்னையில் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா உலக சாதனை நிகழ்ச்சிக்காக கடும் வெயிலில் குழந்தைகளை காக்க வைத்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச நடன தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடங்கள் குழந்தைகள், பெரியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடனம் ஆட ஏற்பாடு செய்யப்பட்டது.
நடிகர் பிரபுதேவா முன்னிலையில் நம்ம மாஸ்டர் என்ற பெயரில் நடனம் ஆடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி நடனம் ஆடுவதற்கு வந்திருந்தனர். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு நடனக் குழுவைச் சேர்ந்தவர்களும் கலந்துக் கொண்டனர். ஏராளமான குழந்தைகளும் காலை 5 மணி முதல் காத்திருந்தனர்.
காலை 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்த நிலையில் நடிகர் பிரபுதேவா சற்று நேரத்தில் வந்துவிடுவார் என அறிவிக்கப்பட்டது. காலையிலேயே கடும் வெப்பம் இருந்ததால் குழந்தைகளும் வெயிலிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் சற்று நேரத்தில் பிரபுதேவா வந்துவிடுவார் என தொடர்ந்து அறிவிக்கப்பட்டதால், ஒருகட்டத்தில் பொறுமை இழுந்த பெற்றோர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக காலை 5 மணியில் இருந்து காத்திருக்கும் சிறுவர், சிறுமியருக்கு உணவு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், தண்ணீர் மட்டுமே கொடுத்ததாகவும் கூறி பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் அவசர அவசரமாக பிரபுதேவா வருவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
அப்போது, ஹைதராபாத்தில் இருக்கும் பிரபுதேவாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் அவர் வீடியோ காலில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வீடியோ காலில் இணைந்த பிரபுதேவா, ”நான் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மீட் பண்ண வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இந்த மாதிரி என் லைப்ல நிகழ்ச்சிக்கு வர ஒத்துக்கிட்டு வராம இருந்ததே இல்லை. இது தான் முதல்முறை அதனால் இதை எப்படி அட்ரஸ் பண்றதுனு என தெரியவில்லை. உடல்நலக் குறைவால் அப்படி ஆகிடுச்சு, உங்கள் எல்லாருக்கும் பெஸ்ட் ஆப் லக்.. ஐ லவ்யூ ஆல்.. ஐ மிஸ் யூ ஆல்” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பலர் பாதியிலேயே வீட்டிற்கு சென்றுவிட்டனர். பல பெற்றோர் வெயிலில் காக்க வைத்து ஏமாற்றிவிட்டதாக புலம்பினர். இதனால் உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெறாமல், எஞ்சியவர்களை வைத்து பிரபுதேவாவிற்கான அர்ப்பணிப்பு நிகழ்வாக நடந்து முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“