முந்தைய அதிமுக ஆட்சியில் தலைநகர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ், அதிமுக அமைச்சர்களுக்கு அனுசரணையாக இருந்தவராக புகார் எழுந்ததால், திமுக ஆட்சிக்கு வந்ததும் மாற்றப்பட்டார். ஆனால், 3-4 மாதங்களிலேயே அவர் மீண்டும் முக்கியப் பதவியைப் பிடித்திருப்பது ஆச்சரியங்களை எழுப்பியுள்ளன.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் தலைநகர் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்தவர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். அதிமுக அமைச்சர்கள், குறிப்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு அனுசரணையாக செயல்பட்டார் என்று புகார்கள் எழுந்தன. அதனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரகாஷ் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, திமுக ஆட்சிக்கு வந்ததும், பிரகாஷ் டம்மியான ஒரு துறைக்கு மாற்றப்பட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரகாஷ் மட்டுமல்ல, அதிமுகவுக்கு ஆதரவாக கருதப்பட்ட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். ஆட்சி மாறியதும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது இயல்புதான் என்றாலும், ஊழல் அமைச்சர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக அளித்த வாக்குறுதியால் அவர்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகளும் நெருக்கடிக்குள்ளாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் ஆளும் கட்சியின் இஷ்டத்துக்கு பந்தாடப்பட்டார்கள். அதில் பல நல்ல அதிகாரிகளும் சிக்கி உருண்டனர்.
பிரகாஷ் எஸ்.பி. வேலுமணிக்கு அனுசரணையாக இருந்தவர் என புகார் எழுந்த நிலையில், திமுக அவரை டம்மியாக ஒரு துறைக்கு மாற்றியது. நவம்பர் மாதத்தில் கலை மற்றும் கலாச்சாரத் துறை ஆணையர் என்கிற பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இவையெல்லாம் பசையில்லாத பதவிகள் என்பதால் பனிஷ்மெட் பதவிகள் என்றே ஐ.ஏ.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இப்போது பிரகாஷுக்கு தமிழகத்தில் பணம் பொங்கும் துறைகளில் ஒன்றான பால்வளத்துறை ஆணையர் பதவி கிடைத்திருக்கிறது. பிரகாஷ் சத்தமில்லாமல் மீண்டும் முக்கியப் பதவியைப் பிடித்திருக்கிறார். அவருக்கு பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது ஆளும் திமுகவில் மட்டுமல்லாமல் ஐ.ஏ.எஸ் வட்டாரங்களிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆச்சரியத்திற்கு காரணம், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையர் பதவிக்கு பல ஆண்டுகளாக யாரையும் நியமிக்காமல் கைவிடப்பட்டிருந்த நிலையில், பிரகாஷ் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவின் எம்.டி என்றழைக்கப்படும் மேலாண்மை இயக்குநர் பதவியிலிருக்கும் ஐ.ஏ.எஸ்தான் பால்வளத்துறை மொத்தத்துக்கும் பொறுப்பாக இருந்த சூழலில் பிரகாஷுக்கு முக்கியத்துவமான பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் ஐ.ஏ.எஸ் வட்டாரங்களில் ஆச்சரியத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”