பிரகாஷ் காரத்தின் தூத்துக்குடி பேச்சு, சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக, திமுக தேக்க நிலையை அடைந்திருப்பதாக கூறியதை திருச்சி சிவா மறுத்தார்.
பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய செயலாளர்! காங்கிரஸுடன் கூட்டணி சேரக்கூடாது என்கிற கருத்தை மார்க்சிஸ்ட் கட்சியில் உறுதியுடன் வலியுறுத்தி வருபவர்! இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தற்போதைய அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும், பிரகாஷ் காரத்துக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டு வருகிறது.
பிரகாஷ் காரத்தின் பேச்சு, இப்போது தமிழ்நாட்டிலும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு பிப்ரவரி 17 முதல் தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஏ.கே. பத்மநாபன், மாநிலச் செயலாளர்
ஜி. ராமகிருஷ்ணன், கட்சியின் முதுபெரும் தோழரும், சுதந்திரப்போராட்ட வீரருமான
என். சங்கரய்யா மற்றும் மத்தியக்குழு, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இருந்து 648 பிரதிநிதிகள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநாட்டில் பேசிய பிரகாஷ் காரத், ‘தமிழகத்தில் திராவிடக் கட்சிகளில் ஒன்று குழப்பத்திலும், இன்னொன்று தேக்க நிலையிலும் இருக்கிறது’ என குறிப்பிட்டார். தேக்க நிலையில் இருப்பதாக பிரகாஷ் காரத் குறிப்பிட்டது திமுக.வையே என கருதப்படுகிறது. பிரகாஷ் காரத்தின் இந்த கருத்து திமுக முகாமை சலசலக்க வைத்திருக்கிறது.
பிரகாஷ் காரத்தின் கருத்துக்கு பதில் தெரிவித்து மாநிலங்களவை எம்.பி.யும், தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா ஒரு அறிக்கை விட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியின் ஈரம் காய்வதற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், “திராவிட முன்னேற்றக் கழகம் தேக்க நிலை அடைந்திருக்கிறது” என்று தூத்துக்குடியில் நடைபெற்ற அக்கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் பேசி அது பத்திரிக்கை செய்தியாக வெளி வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்கட்சியாகவும், ஏழரைக் கோடி தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மாபெரும் இயக்கமாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதை அனைவரும் அறிவர். மாநிலத்தில் மக்களை பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் உத்வேகத்துடன் போராட்டங்களையும், சாலை மறியல்களையும் நடத்தி பிரதான எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் தளபதி கைதான சம்பவங்கள் ஏராளம் இருக்கின்றன.
விவசாயிகள் போராட்டமாக இருந்தாலும் சரி, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போராட்டமாக இருந்தாலும் சரி - ஏன் பேருந்து கட்டண உயர்வாக இருந்தாலும் சரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட ஒத்த கருத்துள்ள தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் சென்று மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஊழல் துர்நாற்றம் அடிக்கும் இந்த அதிமுக அரசையும், பன்முகத் தன்மைக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசையும் எதிர்ப்பதில் இன்றைக்கு முன்னனியில் இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். அகில இந்திய அளவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் நன்கு தெரியும்.
ஆனாலும் ஊழலுக்கு எதிராகவும், நாட்டின் பன்முகத் தன்மைக்கு சீரழிப்போருக்கு எதிராகவும் தோழமை கட்சிகளுடன் இணைந்து போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்த்து “தேக்க நிலைமை அடைந்துவிட்டது” என்று கூறுவது, முனைப்போடு திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து நடத்தி வரும் மக்களுக்கான போராட்டங்களை முனை மழுங்க வைக்கும் முயற்சியில் பிரகாஷ் பிரகாத் திடீர் ஆர்வம் காட்டுகிறாரோ? என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்திக் கொள்ள பிரகாஷ் காரத் ஆலோசனை வழங்கலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் வீறு கொண்டு இயங்கி வரும் ஆற்றல்மிகு தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளையும் - தமிழக மக்களின் பேராதரவை பெற்றுத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பார்த்து “தேக்க நிலைமை அடைந்துவிட்ட கட்சி” என்று கூறுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டனும் மட்டுமல்ல - தமிழக மக்கள் யாரும் துளிகூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை திரு.பிரகாஷ் காரத் அவர்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அது மட்டுமின்றி மக்கள் பிரச்சினைகளுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக பிரகாஷ் காரத் தெரிவித்துள்ள கருத்து அவருக்கு “விருப்பமுள்ள” கருத்தாக இருக்கலாம். ஆனால் நாட்டின் பன்முகத் தன்மையை எதிர்க்கும் கட்சிகளின் ஒன்றிணைத்த போராட்டத்தை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு சிவா கூறியிருக்கிறார்.
பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து அண்மையில் திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். ஆனால் திமுக கூட்டணி போராட்டம் நடத்திய பிப்ரவரி 13-ம் தேதிக்கு முந்தைய நாளில் மார்க்சிஸ்ட் கட்சி தனியாக ஒரு மறியலை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் வேறு சில இடதுசாரி அமைப்புகளை இணைத்துக்கொண்டு நடத்திய அந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட்-திமுக இடையே நீடித்து வரும் நெருடல், பிரகாஷ் காரத்தின் உரையைத் தொடர்ந்து அதிகரித்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.