கொடைக்கானலில் அரசின் விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டியதாக தொடரப்பட்ட புகாரில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கொடைக்கானல் அருகில் உள்ள வில்பட்டி பஞ்சாயத்து பகுதியில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் வீடு கட்டியதாகவும், அதற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் கட்டுமானப் பணியை நிறுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவைச் சேர்ந்த முகம்மது ஜூனைத் என்பவர் , “நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா அனுமதியின்றி விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டியது குறித்து முறையாக விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா, திண்டுக்கல் கலெக்டர், கொடைக்கானல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு' விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடந்து வரும் பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு, கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், நடிகர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக புகார் குறித்து அறிந்த வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மண்டல உதவி அலுவலர் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில் பிரகாஷ்ராஜ் பெயரில் 7 ஏக்கர் பட்டா நிலம் இருப்பது உறுதி செய்யபப்ட்டது. மேலும், பிரகாஷ் ராஜ் தனது நிலத்திற்கு அருகே செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமிக்கவில்லை என்றும், அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த தடை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விதிமுறைகள் மீறி கட்டடம் கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“