Prakash Raj | PM Modi | Karunanidhi: சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்.
இதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், "கருணாநிதி குறித்த மெய் நிகர் அரங்கம் அற்புதமான ஆவணம். தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்திச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. நான் அவருடன் இரண்டு வருடம் பழகிய காட்சிகளை விட அதிகமான காட்சிகள் இங்கு இடம் பெற்றுள்ளது.
கருணாநிதி கொள்கையை வைத்து அரசியல் செய்தவர். அவரின் உயரம் என்பது, அவரால் உயர்ந்து நிற்பவர்களின் உயரத்தில் இருக்கிறது. அதனால் தான் அவர் கலைஞர். கருணாநிதி இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இருந்திருக்காது. கலைஞர் இருக்கும் வரை யாராலும் வாலாட்ட முடியவில்லை.
எத்தனையோ ஷூட்டிங்கிற்கு மக்கள் தானாக வருவார்கள். குமரியில் நடக்கும் சூட்டிங்கிற்கு அவர்களே ஆடியன்ஸை கூட்டி செல்கிறார்கள். கருணாநிதியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் பெருமை அடைகிறேன். கருணாநிதியை பார்த்து கற்றுக் கொண்டதை இப்போது பேசுகிறேன்.
கலைஞர் நூற்றாண்டு என்பதை விட ஒரு நூற்றாண்டு கலைஞரின் விழா என்பதே சரி. கல்லக்குடி போராட்ட காட்சியில் நடித்த போது வியர்த்து விட்டது. கருணாநிதி ஒரு பன்முக தன்மையாளர். என் வசனத்தை பேச சிவாஜிக்கு பிறகு பிரகாஷ்ராஜ் இருக்கிறார் என கருணாநிதி கூறினார். கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது. சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல. கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“