காவிரி பிரச்சனை ட்விட்டரில் என்ன சொன்னார் பிரகாஷ் ராஜ்!!!

ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்பார்கள்

காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீண்ட கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாததை கண்டித்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.  கடந்த வாரம் தமிழகமே போராட்டக்களமாக மாறியது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத போது  சென்னையில்  ஐபிஎல் போட்டிகள்  நடத்தக்கூடாது என்று  போராட்டங்கள் வெடித்தன.

இதன் எதிரொலியாக சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது . இந்நிலையில்,  காவிரி விவகாரத்தின் மூலம் அரசியல் காட்சிகள் ஆதாயம் தேட நினைப்பதாக நடிகர்  பிரகாஷ் ராஜ்  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “ தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது. காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை.

அரசியல் தலைவர்கள் தீர்வு தேடுவதில் அக்கறை காட்டாமல் உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களை பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து, அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close