மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று(6.9.18) வருகை தந்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி :
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு ஏராளமான தேசிய தலைவர்கள், திமுக தொண்டர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பல காரணங்களால் நேரில் வர முடியாதவர்களும், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று உரிய மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மரியாதை நிமித்தமாக கோபாலபுரத்திற்கு வந்தார். பின்பு மறைந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஸ்டாலினை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார். மேலும் துரைமுருகனையும் சந்தித்து பேசினார்.
சென்னை வந்த முன்னாள் ஜனாதிபதியை திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று வரவேற்றார். கோபாலபுரத்தில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ இந்தியாவின் மூத்த தலைவரான கருணாநிதி மறைவுக்கு, ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம். கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இதனால் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன். பின்னர் ஸ்டாலின், கனிமொழி உள்பட அவரின் குடும்ப உறுப்பினருக்கு ஆறுதல் தெரிவித்தேன். 48 ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி.” என்று கூறினார்.