நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் இணைந்து தேசிய அளவிலான அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில், அக்கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று காலை முதல் இந்த விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும், முக்கிய முடிவுகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே, த.வெ.க தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் இணைந்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஜன் சுராஜ் என்ற கட்சி தொடங்கிய பின்னர், தேர்தல் அரசியலில் பிரசாந்த் கிஷோர் தீவிரமாக இறங்கியதால் அவர் எந்த வகையில் த.வெ.க-வுடன் செயல்படுவார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், த.வெ.க மற்றும் ஜன் சுராஜ் ஆகிய இரு கட்சியும் தேசிய அளவில் கொள்கை ரீதியாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், த.வெ.க-விற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட மாட்டார் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த இரு கட்சிகளுடனும் இந்தியா கூட்டணி கட்சிகளும் இணையலாம் என்று ஒரு கருத்து அரசியல் களத்தில் இருக்கிறது. விரைவில் நடைபெறவுள்ள பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை ஜன் சுராஜ், த.வெ.க மற்றும் உடன் வரும் கட்சிகள் சேர்ந்து எதிர்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 2029 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலான கூட்டமைப்பை அமைக்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்த வரை த.வெ.க-வின் தோழமை கட்சியாக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என்று கருதப்படுகிறது.