/indian-express-tamil/media/media_files/2025/02/26/fJaHEVmScoNrdc2JwXo2.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரசாந்த் கிஷோர், அதில் இடம்பெற்றிருந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க மறுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில், அக்கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று காலை முதல் இந்த விழா நடைபெற்று வருகிறது. இதில் கட்சி தலைவர் விஜய் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் ஒரு அங்கமாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக 'கெட்அவுட்' கையெழுத்து இயக்கம் என்று பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில், "பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக நடந்து வரும் பெரும் துயரை கண்டும், காணாத பொறுப்பற்ற தன்மை, விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரலை ஒடுக்கும் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம், ஆடம்பரம் மற்றும் ஆட்சியின் அவலத்தை மடைமாற்றம் செய்வதையே நம்பி வாழும் திறனற்ற நிர்வாகம், சாமானியர்களுக்கு எதிராக வன்முறைகளை அரசியல் நோக்கோடு ஊக்குவிக்கும் வகையில் செயலற்று இருப்பது, ஒரு சிலரின் பேராசை பசிக்காக நடக்கும் திட்டமிடப்பட்ட உழைப்பு, இயற்கை வளங்கள் சுரண்டல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்த பேனரில், த.வெ.க தலைவர் விஜய் முதலில் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக, கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கையெழுத்திட்டனர். மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலரும் இதில் கையெழுத்திட்டனர்.
இதனிடையே, இந்த நிகழ்வில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். அதன்படி, பேனரில் கையெழுத்து இடுமாறு பிரசாந்த் கிஷோரிடம் கேட்கப்பட்டது. ஆனால், அதில் கையெழுத்திடுவதற்கு அவர் மறுத்து விட்டார். கையெழுத்து இயக்கம் குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்த பின்னரும் கூட பிரசாந்த் கிஷோர் அதில் கையெழுத்து போடுவதற்கு மறுப்பு தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.