இந்தி பேசும் மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும், வட மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ தவறானது, வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அறிவித்தனர்.
மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்கிற கையுறை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் வேலை செய்கிற வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தாங்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரபலம் தேர்தல் வீயூகவாதி பிரசாந்த் கிஷோர், இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிய வீடியோவை இந்தி மொழிபெயர்ப்புடன் பதிவிட்டுள்ளார். அதில், “வெறுப்புணர்வு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்களை ஆனால், முற்றிலும் விட்டுவிடவில்லை. சீமான் போன்றவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அவர்களுடைய விறுவிறுப்பான பேச்சுக்காக நடவடிக்கை இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் சீமான், “இந்திகார பயலுவ எல்லாம் அவனே பெட்டிய கட்டிக்கிட்டு சலோ சலோனு ஓடுவான். எத்தனை பேரை எங்க தூக்கி வச்சி வெளுக்கிறனு தெரியாது. ஒரே வாரத்துல பெட்டிய கட்டுருவான். கஞ்சா வச்சிருந்தான் போட்றா, அபின் வச்சிருந்தான் போட்றா, பொண்ணை கைப்புடிச்சி இழுத்தான், கற்பழிப்பு போட்றா, அங்க பாலியல் தொல்லை போட்றா, ஆயிரம் பேரைத் தூக்கி உள்ள போட்டு, அவனுக்கு சோறு போடாத உள்ள வச்சி பிச்சிவிட்டன்னு வச்சிக்க,” என்று கூறி கையெழுத்து கும்பிட்டுவிட்டு போய்விடுவார்கள் என்று பேசுகிறார்.
இந்தி பேசும் மக்கள் மீது வெறுப்புணர்வு மற்றும் தூண்டும் விதமாகப் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி இருப்பது தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.