தேர்தல் வியூகஆலோசகர் பிசாந்த் கிஷோரின் I-PAC அமைப்பு 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து அதை செயல்படுத்தி வெற்றியை ஈட்டித் தருபவராக உள்ளார் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். இதற்காக பிரச்சாந்த் கிஷோர் உருவாக்கியுள்ள I-PAC அமைப்பில் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் பணிபுரிகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு முதலே சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூகங்களை அமைத்து செயல்படுத்துவதற்கு பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் பேசப்பட்டது. ஆனால், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், வருகிற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தனது அமைப்பின் ஊழியர்களுடன் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பது அப்போதே கூறப்பட்டது.
யார் இந்த பிரசாந்த் கிஷோர்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசு சிக்கலுக்குள்ளானது. அதனால், நிதிஷ் குமார் தனது கட்சியின் முக்கிய தலைவரும் தேர்தல் வியூக ஆலோசகருமான பிரசாந்த் கிஷோரை கட்சியை விட்டு நீக்கினார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 2021 தேர்தலில் நம்முடன் பணியாற்ற தமிழ்நாட்டின் பிரகாசமான மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட பல இளம் தொழில் வல்லுநர்கள் இந்தியன் பிஏசி அமைப்பின் கீழ் நம்முடன் இணைகிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு அதன் முந்தைய பெருமையை மீட்டெடுப்பதற்கான நம்முடைய திட்டங்களை வடிவமைக்க இவர்கள் உதவுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப் பேரவதி தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோரின் I-PAC செயல்படும் என்பதை மு.க.ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.