தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
இதன்பிறகு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ‘தமிழன் கொடி பறக்குது’ என்ற கட்சியின் பாடலையும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, அதே மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டை நடத்தினார்.
இந்த மாநாட்டில் விஜய் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இதேபோல், கடந்த டிசம்பரில் சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொண்டார். மாநாட்டிற்கு பிறகு அவர் ஏறிய முதல் பொதுமேடை அதுவாக இருந்தது. அந்த விழாவில் அவர் பேசியதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியதன் எதிரொலியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் த.வெ.க-வில் இணைந்த நிலையில், அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது விஜய்யின் த.வெ.க அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. அண்மையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார். இதனிடையே, த.வெ.க நிர்வாகிகள் நியமனமும் நடைபெற்றது.
2-ம் ஆண்டு தொடக்க விழா
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. 'கான்புளுயுன்ஸ்' தனியார் ஓட்டலில் பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார்.
பிரசாந்த் கிஷோர் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் காரணமாக இருக்க முடியாது. உங்களின் வெற்றிக்கு நீங்கள் செய்யும் பணியே காரணம். உங்கள் தலைவரும், தொண்டர்களும் செய்யும் பணிகளால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
பிறகு நான் ஏன் வந்திருக்கிறேன் எனக் கேட்கலாம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வியூகப் பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். 2021 தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்குவங்கத்துக்கான வேலை செய்த பிறகு நான் ஓய்வு பெற்றுவிட்டேன். இங்கு த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக நான் வரவில்லை. அவர்களுக்கு என் வியூகமும் தேவையில்லை. நான் எனது சகோதரர், நண்பருமான விஜய்க்கு ஆலோசனை கூற வரவில்லை. அவருக்கு அது தேவையும் இல்லை.
என்னைப் பொறுத்தவரை விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல, அவர் தமிழகத்தின் புதிய நம்பிக்கையாக இருக்கிறார். அதனால் தான் நான் இங்கு வந்துள்ளேன். த.வெ.க. அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம். 35 ஆண்டுகால அரசியலில் புதிய மாற்றத்தை விஜய் ஏற்படுத்த இருக்கிறார். அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வந்துள்ளேன். எனக்கு தமிழ் பேச வராது, ஆனால் புரிந்துகொள்ள முடியும்.
அடுத்தாண்டு த.வெ.க. வென்றால், நான் மீண்டும் இங்கு வந்து தமிழில் நன்றி கூறி உரையாற்றுவேன். தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும். நம்மில் பலர் வாரிசு அரசியலில் கவனம் செலுத்துவதில்லை. கபில்தேவ், சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களின் மகன்கள் கிரிக்கெட்டில் ஆடிருந்தால், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி அல்லது விராட் கோலி போன்ற சிறப்பான வீரர்கள் நாம் நாட்டுக்கு கிடைத்திருப்பார்களா?
எம்.எஸ்.தோனியைப் பற்றி நிறைய நிறைய பேசப்படுவது உண்டு. தமிழ்நாட்டில் என்னை விட பிரபலமான ஒரே பீஹாரி அவர்தான். தமிழ்நாட்டில் பிரசாந்த் கிஷோரை விட தோனி மிகவும் பிரபலமானவர் தான் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். அடுத்தாண்டு எனது பங்களிப்புடன் த.வெ.க-வை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைக்கும் போது தோனியை விட நான் பிரபலம் ஆவேன். " என்று அவர் கூறினார்.