தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் திங்கள்கிழமை சென்னையில் சந்தித்ததாக தகவல் வெளியான நிலையில், இன்று த.வெ.க-வின் வாக்கு சதவீதம் மற்றும் அதை அதிகரிப்பது குறித்து விஜயிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இடையே நேற்று (10.02.2025) 3 மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. இதனால், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் த.வெ.க-வுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த், மற்றும் அக்கட்சியின் தேர்தல் வியூக வகுக்கும் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர்கள் இந்த அறிக்கையை விஜயிடம் சமர்பிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில், த.வெ.க-வின் தற்போதைய வாக்கு சதவீதம் குறித்தும், அக்கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது குறித்தும் அக்கட்சி அதற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பிரபலமான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த பட்டியலை த.வெ.க வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமாக திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் குழந்தைகள் அணி என்ற அணி சர்சையை உருவாக்கியுள்ளது. ஏனெனில், இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது.
தமிழக வெற்றிக்கழக அணிகளின் பட்டியல்:
1.தகவல் தொழில்நுட்ப பிரிவு
2.வழக்கறிஞர் பிரிவு
3.மீடியா பிரிவு
4.பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு
5.பயிற்சி மற்றும் தொண்டர் மேம்பாட்டு பிரிவு
6. உறுப்பினர் சேர்க்கை பிரிவு
7.காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு
8.வரலாற்று தரவு ஆராய்ச்சி மற்றும் உண்மை சரிபார்ப்பு பிரிவு 9.திருநங்கைகள் பிரிவு
10. மாற்றுத் திறனாளிகள் பிரிவு
11.இளைஞர்கள் பிரிவு
12.மாணவர்கள் பிரிவு
13.பெண்கள் பிரிவு
14.இளம் பெண்கள் பிரிவு
15.குழந்தைகள் பிரிவு
16.தொண்டர்கள் பிரிவு
17.வர்த்தகப்பிரிவு
18.மீனவர் பிரிவு
19.நெசவாளர் பிரிவு
20.ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு
21.தொழிலாளர் பிரிவு
22.தொழில்முனைவோர் பிரிவு
23.அயல்நாட்டில் வசிப்பவர் பிரிவு
24.மருத்துவர்கள் பிரிவு
25.விவசாயிகள் பிரிவு
26.கலை கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிரிவு
27.தன்னாளால் தன்னார்வலர்கள் பிரிவு
28.அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்