திருப்பூர் மாவட்டத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் செய்துகொண்ட கிருத்திகா உயிரிழந்தார். அவருக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது, நண்பர் மற்றும் நண்பர் மனைவி ஆகிய 3வர் மீது வழக்கு பதிவு.
திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் பனியன் நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
யூடியூ மூலம் பிரசவம் பார்த்ததில் பலியான பெண் கிருத்திகா
நல்ல வசதியான வாழ்க்கை மேற்கொண்ட இவர்களுக்கு ஹிமானி என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் இயற்கை மருத்துவத்தின் மீது அலாதியான ஆர்வம் கொண்டவர்கள் இவர்களுக்கு ஆங்கில மருத்துவம் என்பது ஒரு பொருளாதாரம் மிகுந்த மற்றும் அதிக செலவை உருவாக்கக்கூடிய மருத்துவம் என்ற எண்ணம் இருந்து வந்தது. இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி லாவண்யாவின் பழக்கமானது கிருத்திகாவிற்கு ஏற்பட்டுள்ளது.
யூடியூப் மூலம் பிரசவம் பார்த்துக்கொண்ட தம்பதி
லாவண்யா தம்பதியினரின் மகள் இயல்மதி சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பிறந்ததாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் லாவண்யா தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதனால் தனக்கும் சுகப்பிரசவம் வீட்டிலேயே நடக்க வேண்டும் என ஆசைப்பட்டார் கிருத்திகா. இதனை அடுத்து கார்த்திகேயன் கிருத்திகா தம்பதியினர் இருவரும் பேசி வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்வதென முடிவு செய்தனர். இதனையடுத்து இருவரும் யூடியூப் மூலமாக பல்வேறு சுகப் பிரசவம் குறித்த வீடியோக்களை பார்த்துள்ளனர்.
மேலும் இரண்டாவது குழந்தை உருவானதும் முதல் மாதம் முதலே எந்தவிதமான மருத்துவமனைக்கும் செல்லாமல் தவிர்த்து வந்துள்ளனர். இதுகுறித்து கார்த்திகாவின் தந்தை சுப்ரமணி பலமுறை வற்புறுத்தியும் கார்த்திகேயன் தம்பதியினர் கட்டாயமாக மறுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி கிருத்திகாவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லாவண்யாவை போனில் அழைத்த கிருத்திகா தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது பிரசவம் பார்த்ததில் கிருத்திகா உயிரிழந்தார். இது குறித்து கிருத்திகாவின் தந்தை கூறுகையில், “பலமுறை இது வேண்டாம் என்று நான் அறிவுறுத்தியும் அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை. தனது முடிவை தானே தேடிக்கொண்டனர்” என்று தெரிவித்தார். இந்த துயர சம்பவத்தில் தாய் கிருத்திகா பலியான நிலையில், பிறந்த குழந்தை நலமாக இருப்பது தெரியவந்துள்ளது.
கிருத்திகா உயிரிழந்த சம்பவத்தில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிக்கு மருத்துவ சிகிச்சையை தடை செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கணவர் கார்த்திகேயன், நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.