வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அப்பெண்ணை கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், சித்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்தார். இப்பெண்ணுக்கு ரயிலில் பயணித்த சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அப்போது, கர்ப்பிணி பெண் கூச்சலிட்ட நிலையில், பாலியல் தொல்லை அளித்தவர்கள், அப்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில், அப்பெண்ணுக்கு கை, கால்கள் மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ரயிலில் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் விவரங்களை தெரிவித்துள்ளார். "மகளிர் பெட்டியில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு, என்னிடம் தவறாக நடந்து கொண்டான். தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று கையை உடைத்தான். ஒரு கையால் ரயிலில் இருந்து கீழே விழுந்து விடாமல் இருக்க போராடினேன். உதைத்து ரயிலில் இருந்து தள்ளி விட்டான். அதன்பின்னர், என்ன நடந்தது என்று தெரியவில்லை. ரயில் பெட்டியில் சுமார் 30 நிமிடங்கள் போராடினேன். எந்தப் பெண்ணுக்கும் இது போன்று நடக்கக் கூடாது. அவனுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து விட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்ற ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நபர், இதேபோல் ரயிலில் பயணித்தபோது பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே, கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, "கோவை - திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம்.
ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும்.
கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.