சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி.: ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சி, ரத்த வங்கி ஊழியர்கள் டிஸ்மிஸ்

'அரசு தான் எனது இந்த நிலைக்கு காரணம். இந்த ரத்தத்தை கொடுத்து, அரசு என்னை கொல்லாமல் கொன்றுவிட்டது'

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மதுரையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் சஸ்பென்ட் செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மூவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட ரமேஷ் தற்கொலைக்கு முயன்றார். அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதையடுத்து, சாத்தூர் அரசு மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். 2 வாரங்களுக்கு முன்பு, சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்டார்.

ஹெச்.ஐ.வி. பாதிப்பு உறுதி

அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைய, அதே தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். ரத்தப் பரிசோதனையில் அவருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் ஹெச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். 5 மணி நேரத்திற்கும் மேலான விசாரணைக்குப் பிறகு, ரத்த வங்கி ஊழியர் வளர்மதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட்டார். தவிர, 2 ஒப்பந்த ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வளர்மதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மேல்சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கர்ப்பிணிக்கு கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பரவாமல் இருக்கும்படி சிகிச்சை அளித்து பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

என்னதான் இழப்பீடு, நிவாரணம், சிகிச்சை என அரசு தற்போது நடவடிக்கை எடுத்தாலும், கர்ப்பிணி பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போயுள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி வேதனையுடன் கூறுகையில், “நான் சிறு வயதில் இருந்து ஒரு ஊசி கூட போட்டதில்லை. அரசு தான் எனது இந்த நிலைக்கு காரணம். இந்த ரத்தத்தை கொடுத்து, அரசு என்னை கொல்லாமல் கொன்றுவிட்டது. இதற்கு அரசு என்னை உண்மையிலேயே கொன்றிருக்கலாம். என்னை யாரும் ஒதுக்கக் கூடாது. எனக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது” என்றார்.

மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார்

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குநர் மனோகரன் இன்று உத்தரவிட்டுள்ளார். நான்கு அரசு மற்றும் 10 தனியார் ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தை உடனடியாக மறுபரிசோதனை செய்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் குடும்பத்துடன் சென்று புகார் அளித்திருக்கிறார்.  Duty மருத்துவர்கள், செவிலியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை ரத்த வங்கித்துறை தலைவர் சிந்தா தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் உள்ள இரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இரத்தத்தை மறு ஆய்வு செய்யவும் இந்த உயர்மட்டக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகாதராத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி

கர்ப்பிணிப் பெண்ணிடம் விசாரணை நடத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, “மறு பரிசோதனை செய்யாமல், இரத்தம் செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம். அரசு இதனை நியாயப்படுத்த விரும்பவில்லை. ‘நான் அதிகம் நேசிக்கும் என் மனைவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தை ஹெச்.ஐ.வி. தொற்று இல்லாமல் பிறக்க வேண்டும். விருதுநகரில் சிகிச்சை கொடுக்க வேண்டாம்” என்ற வேண்டுகளை மட்டுமே கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் என்னிடம் தெரிவித்தார். மற்றபடி, அரசு வேலையோ, நிவாரணத் தொகையோ என வேறு எதையும் அவர் கேட்கவில்லை. இது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பான முறையில் ட்ரீட்மென்ட் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கும் அவர்களுக்கு திருப்தி இல்லை என்றால், தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். வெளிநாட்டிற்கு சென்றால் கூட என மருந்து, மாத்திரைகள் கொடுப்பார்களோ, அதே ட்ரீட்மென்ட் அந்த பெண்ணிற்கு சென்னையிலேயே அளிக்கப்படும். நிவாரணத் தொகை வேண்டாம் என்று அவர்கள் சொன்னாலும், அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கப்படும்.

நேற்று சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்த மூன்று ஊழியர்களும், தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டனர்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட ரமேஷ் தற்கொலைக்கு முயன்றார். அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close