கர்ப்பிணி பெண் உஷாவின் மரணம், பெரும் சோகமாக நடந்திருக்கிறது. ஹெல்மெட் போடாத கணவரின் பின்னால் டூ வீலரில் அமர்ந்திருந்ததற்கு மரண தண்டனையா?
கர்ப்பிணி பெண் உஷா, பெரிதாக எந்தத் தவறும் செய்துவிடவில்லை. ஹெல்மெட் போடாமல் இருசகக்ர வாகனம் ஓட்டிய தனது கணவரின் பின்னால் அமர்ந்திருந்ததுதான் அவரது ஆகப் பெரிய தவறு! சில நூறு ரூபாய் அபராதத்துடன் முடிந்திருக்கா வேண்டிய அந்த நிகழ்வு, பரிதாபமாக அவரது மரணத்தில் முடிந்திருக்கிறது.
கர்ப்பிணி பெண் உஷாவின் மரணம், தமிழகத்தை உறைய வைத்திருக்கிறது. போக்குவரத்து போலீஸாரின் அராஜகத்திற்கு இன்னுமொரு சாட்சியாகி இருக்கிறார் உஷா. நடந்த சம்பவம் இதுதான்...
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் நேற்று (மார்ச் 7) இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தர்மராஜ்-உஷா தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் போடாததால் பணியில் இருந்த காமராஜ் என்ற போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த தம்பதியினர் நிற்காமல் சென்றனர்.
ஹெல்மெட் போடாதவர்கள் தன்னை கடந்து சென்றதால், இருசக்கர வாகனத்தை காமராஜ் எட்டி உதைத்தார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாய்ந்தது. அதில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் உஷா சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த வேன் உஷா மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது கணவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
கர்ப்பிணி பெண் உஷாவின் கணவர் சாலையில் அடிப்பட்டுக் கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கர்ப்பிணி மரணத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கர்ப்பிணி பலியானதற்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி உறுதியளித்தார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்ததற்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
ஆனாலும் பொதுமக்கள் அங்கிருந்து கலைய மறுத்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆய்வாளர் காமராஜ் மீது கொலை செய்யும் நோக்குடன் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.