உஷா மரணம் : தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

உஷா மரணத்திற்கு நீதி கிடைக்குமா? மோட்டார் சைக்கிளை மீண்டும் மீண்டும் எட்டி உதைத்தால் அந்தப் பெண் கீழே விழுவார் என்பது காவல் ஆய்வாளருக்கு தெரியாதா?

உஷா மரணத்திற்கு நீதி கிடைக்குமா? மோட்டார் சைக்கிளை மீண்டும் மீண்டும் எட்டி உதைத்தால் அந்தப் பெண் கீழே விழுவார் என்பது காவல் ஆய்வாளருக்கு தெரியாதா?

கர்ப்பிணி பெண் உஷா மரணம், தமிழகத்தில் போலீஸ் அராஜகத்தின் இன்னொரு சாட்சி ஆகியிருக்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நேற்று (மார்ச் 7) தனது கணவர் தர்மராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். தர்மராஜா ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினார் என்கிற குற்றத்திற்காக அடுத்தடுத்து 3 முறை மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்திருக்கிறார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ்.

உஷாவும், தர்மராஜாவும் இதில் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம். உலகமே பெண்களின் உரிமையை கொண்டாடும் இந்த நாளில் உஷாவுக்கு நேர்ந்த துயரம், தமிழ்நாட்டை உறைய வைத்திருக்கிறது.

உஷா மரணத்திற்கு காரணமாக காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை செய்யும் நோக்கில் விபத்து ஏற்படுத்தினார் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு. ஆனால் இந்த நடவடிக்கையை ஏற்க மறுத்து திருவெறும்பூர் மக்கள் போராடி வருகிறார்கள்.

கர்ப்பிணி பெண் உஷா மரணம் தொடர்பாக காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். உஷா சாகடிக்கப்பட்டதை கண்டித்து மறியல் செய்த பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வெண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று உஷா உடல் பரிசோதனை நடந்த ‘மார்ச்சுவரி’ முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக அரசுக்கும் போலீஸுக்கும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதன் LIVE UPDATES

மாலை 6.00 : திருவெறும்பூர் அருகே வாகன சோதனையில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

மாலை 4.30 : திருச்சி திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். உஷா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர்!

மாலை 3.15 : தமிழ்நாடு அரசு தலைமை செயலாளருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அனுப்பிய அறிக்கையில், ‘வாகன தணிக்கையின்போது நிறுத்தாமல் சென்றதால் காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்றபோது, சாலை விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து உஷா உயிரிழந்தார்.’ என குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைக்கவில்லை என்றும், தற்செயல் விபத்து என்பது போலவும் இந்த அறிக்கை இருப்பதாக உஷாவின் உறவினர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.

பிற்பகல் 3.00 : திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி விடுத்துள்ள கண்டன பதிவில், ‘திருச்சியில் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்துள்ளார். பைக் தடுமாறி கீழே விழுந்ததில், கர்ப்பிணி பெண் உஷா பரிதாபமாக இறந்துள்ளார். காவல்துறையின் காட்டுமிராண்டி தனமான செயல் இது. அதிகார வர்க்கத்தின் காட்டுத் தர்பாரை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

பெண்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே பெண்ணின் உயிர் இழப்புக்கு காரணமாகியுள்ளது, வேலியே பயிரை மேய்வதுக்கு சமமானது. சம்மந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என கூறியிருக்கிறார்.

பிற்பகல் 2.00 : கர்ப்பிணி பெண் உஷாவின் மரணத்தை கொலை வழக்காக பதியக் கோரி திருச்சி ஜே.எம்.6 நீதிமன்றத்தில் உஷாவின் கணவர் ராஜா மனுத்தாக்கல் செய்தார்.

பகல் 1.00 : உஷாவின் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆறுதல் கூறினார்.

பகல் 12.00 : கர்ப்பிணி பெண் உஷா மரணத்திற்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது ஐபிசி பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி உஷாவின் உறவினர்கள் பிரேத பரிசோதனை நடந்த அறை முன்பு போராடி வருகிறார்கள். அவர்களுடன் திருச்சி காவல் துணை ஆணையர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். ஆனால் பொதுமக்கள் மீது போட்ட வழக்குகளை வாபஸ் பெறவும், காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் வலியுறுத்தி போராட்டத்தை தொடர்கிறார்கள் மக்கள்.

பகல் 12.00 : கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது, சட்டவிரோதமான செயல் என்றும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, ‘திருவெறும்பூர் சம்பவம் கிரிமினல் குற்றத்துக்கு சமமானது’ என தெரிவித்தார்.

பகல் 11.45 : தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட செய்தியில், ‘காவல்துறை, காவு வாங்கும் துறையாக இல்லாமல் சேவை செய்யும் துறையாக இருக்க வேண்டும்’ என கூறியிருக்கிறார்.

பகல் 11.30 : திருச்சி திருவெறும்பூரில் கர்ப்பிணி உஷா உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் காமராஜ் சிறையிலடைக்கப்பட்டார். துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளரான அவருக்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

பகல் 11.25 : திருவெறும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 100 பேரை விடுவிக்கக் கோரி திருவெறும்பூர் காவல்நிலையத்தை உஷாவின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். கைதான 100 பேரையும் போலீசார் எங்கு வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

பகல் 11.15 : திருவெறும்பூரில் கர்ப்பிணி உஷா உயிரிழந்த விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

பகல் 11.00 : கர்ப்பிணி உஷாவின் கணவர் தர்மராஜா அளித்த பேட்டியில், ‘போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் 2 முறை இருசக்கர வாகனத்தை துரத்தி எட்டி உதைத்தார். இரு சக்கர வாகனத்தை 3 ஆவது முறையாக ஆய்வாளர் எட்டி உதைத்ததில் எனது மனைவி கீழே விழுந்து பலியானார்’ என்றார்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close