நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஜுன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. விருதுநகரில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இந்நிலையில், விஜய பிரபாகரன் மற்றும் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். கடும் இழுபறி இருந்தது. இறுதியில் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விஜய பிரபாகரன்- 3,71,092 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில் இன்று (ஜுன் 6) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது, "விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார்; வீழ்ச்சியடையவில்லை சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் இதுதான் உண்மை. அதற்கான ஆதாரங்கள் எல்லா என்னிடம் உள்ளது. விஜயபிரபாகர் கடைசி நிமிடங்கள் வரை போராடினார்.
அனைத்து வேட்பாளர்களும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்றபோது விஜயபிரபாகரன் 4,000 வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றார். தோல்வியை முழு மனதாக ஏற்கிறோம். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.
விஜய பிரபாகர் மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 3 மணி முதல் 5 மணிவரை வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியது ஏன்? 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது ஏன்?
அதிகாரப்பூர்வ அறிவிப்பும், களத்தில் இருந்து வந்த தகவல்களும் முரண்பாடாக இருந்தன. தபால் ஓட்டுகளை நள்ளிரவில் எண்ணியது ஏன்?. விருதுநகர் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது; அவரது போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது.
விருதுநகர் தொகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மற்றொரு முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் நல்ல முடிவை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 45 நாட்கள் வரை மறு வாக்கு எண்ணிக்கை கோர உரிமை உள்ளது. தேர்தல் ஆணையம் உரிய நீதியை வழங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும். அதிமுகவில் இருப்பது உட்கட்சி பிரச்சினை. அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அது வரவேற்கத்தக்கது" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து விஜயபிரபாகர் பேசுகையில், "தேர்தல் ஆணையம் முறையாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றிருந்தால் அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். மற்றொரு முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். நான் வெற்றி பெற்றிருந்தால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திருப்பேன்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“