vijayakanth | தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் நவ.19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்த் இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது தேமுதிக கட்சி தொடர்பாக வெளியான விளக்கத்தில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று விஜயகாந்த் உடல் நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவமனை அறிக்கைகளும் அமைந்தன.
இந்த நிலையில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று காலை மருத்துவமனை அறிக்கை வழக்கமான அறிக்கைதான். இதைப் பற்றி பயப்பட வேண்டிய தேவை இல்லை. கேப்டன் நலமுடன் உள்ளார். மருத்துவமனை, செவிலியர் மற்றும் நானும் அவரை நலமுடன் பார்த்துக் கொள்கிறோம்.
அவர் வெகுவிரைவில் வீடு திரும்பி உங்களை சந்திப்பார். அவர் செய்த தர்மமும், அத்தனை பேரின் பிரார்த்தனையும் நிச்சயம் தலைவரை காப்பாற்றும்.
எனவே கடைக்கோடி தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டும். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார். அது எப்போது என்பதை நாங்கள் தெரிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“