/indian-express-tamil/media/media_files/2025/06/01/Mbn0ZnGjl021oHgWH1BM.jpg)
தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படுவது குறித்து ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது எனவும், அதற்கான கடமையை அ.தி.மு.க நிறைவேற்றியுள்ளது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூன் 1) சென்னை, கோயம்பேட்டில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதன்படி, "இன்று மதுரையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக ஸ்டாலினுக்கும், தி.மு.க-விற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விஜயகாந்த் மறைந்த போது எங்களுடன் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரையும் நாங்கள் மறக்க மாட்டோம்.
2026-ஆம் ஆண்டு தே.மு.தி.க-விற்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அனைவருக்கும் ஒரு விஷயத்தை நான் கூற வேண்டும் என்று நினைக்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது, 5 மக்களவை தொகுதி, 1 மாநிலங்களவை இடம் உறுதி செய்யப்பட்டது. இதில் மாற்றுக் கருத்து கிடையாது.
எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது என்பது உண்மை. ஏற்கனவே, அன்புமணி மற்றும் ஜி.கே வாசன் ஆகியோருக்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து ராஜய்சபா சீட் தரப்பட்டது. இந்த முறை அதற்கான சீட்டை தே.மு.தி.க-விற்கு கொடுக்க வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது.
அந்த வகையில், அவர்களது கடமையை அவர்கள் ஆற்றி இருக்கின்றனர். 2026-ஆம் ஆண்டில் ராஜ்யசபா சீட்டை தே.மு.தி.க-விற்கு வழங்க இருப்பதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது. அரசியல் என்பதே தேர்தலை மையப்படுத்தியது தான். எனவே, 2026 தேர்தலையொட்டி தான் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் கடமையையும் தேர்தலையொட்டி நாங்கள் ஆற்றுவோம்.
2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் தே.மு.தி.க மாநாட்டில், எங்கள் கட்சியின் கூட்டணி மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். இன்னும் ஓரிரு நாட்களில் 234 தொகுதிகளுக்கும் மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்க இருக்கிறோம். கட்சியின் வளர்ச்சிக்கான பணிகளை இந்த ஆறு மாத காலத்தில் மேற்கொள்கிறோம்.
தே.மு.தி.க-வின் பயணமும் தேர்தலை முன்னிட்டு தான் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.